நடிகர்களுக்கு போதை மருந்து சப்ளை.. பிரபல தாதா முத்தப்ப ராய் மகன் வீட்டில் சிசிபி போலீஸ் ரெய்டு
பெங்களூர்: மறைந்த பிரபல தாதா முத்தப்ப ராய் மகன் ரிக்கி ராய் வீட்டில் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
கன்னட திரையுலகத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையின் ஓர் அம்சமாக இவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.

பெங்களூர்-மைசூர் சாலையில் உள்ள பிடதி என்ற இடத்தில் முத்தப்ப ராய் வீடு உள்ளது. அங்குதான் ரிக்கி வசித்துவருகிறார். இன்று காலை 6 மணியளவில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஏசிபி, வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் அங்கு ரெய்டு நடத்தியுள்ளனர்.

பிறகு ரிக்கியை தங்களுடன் அழைத்துக் கொண்டு மைசூர் சாலையில் விரைந்தனர். அங்கு உள்ள பண்ணை வீட்டில் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூர் நகரத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் கன்னட நடிகர் நடிகைகளுக்கு இவை சப்ளை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து பல்வேறு நடிகர் நடிகைகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டனர்.
இது போன்ற போதை மருந்து சப்ளையில் முத்தப்ப ராய் மகன் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த ரெய்டு நடந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்தப்ப ராய் கடந்த மே மாதம் இறந்தார். இவர் ஜெய் கர்நாடகா என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications