நீரில் மிதக்கும் சில்க் போர்ட்! பல கி.மீக்கு டிராபிக்.. தத்தளிக்கும் பெங்களூர்! 8 வருடங்களில் மோசம்!
பெங்களூர்: பெங்களூரில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக பெங்களூரில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. லேசான மழை பெய்தாலே இங்கு தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தண்ணீர் தேங்கியது
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக இன்றும் அவுட்டர் ரிங் ரோட் முழுக்க பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. பெல்லந்தூரில் இருக்கும் RMZ Ecospace பகுதி, அதை ஒட்டிய சாலை முழுக்க தண்ணீர் தேங்கியது. முக்கியமாக நேற்று இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மிமீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மழை பெய்த சில நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. நேற்று இரவே இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

வெள்ளம்
இன்று காலை அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் தங்கியது. இதனால் பாலத்திலேயே பல்வேறு வாகனங்கள் சிக்கின. இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கு டிராபிக் ஏற்பட்டுள்ளது. மகாதேவபரா, மாரத்தஹள்ளி பகுதிகளிலும் இதனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சில்க் போர்ட்
பெங்களூர் சாலைகள் பொதுவாக குழிகளுக்கு பெயர் போனது. அங்கு சாலைகள் சரியாக இல்லை என்று மக்கள் ஏற்கனவே புகார்கள் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் தேங்கி இருக்கும் வெள்ளம் காரணமாக மக்கள் பலர் குழிகளில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கி உள்ளனர். அவுட்டர் ரிங் ரோட்டில் விபத்தில் சிக்கிய பைக் ஓட்டிகள் சிலரை மீட்கும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது. இதனால் பெங்களூர் ஐடி ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான சாலைகள்
பெங்களூரின் மோசமான சாலைகள் குறித்து ஐடி நிறுவனங்கள் தற்போது அம்மாநில முதல்வருக்கு கடிதமும் எழுதி உள்ளனர். உடனே உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வர் பசவராஜ் பொம்மை அங்கு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார். பெங்களூரில் இன்னும் 4 நாட்களுக்கு விடாமல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
