ஒரே ட்ரெஸ்.. ஒரே ஆண்டில் 40 முறை துபாய்.. நடிகை ரன்யா ராவ் டெல்லி அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் அண்மைக்காலமாக அதிக அளவில் துபாய் சென்று வந்துள்ளார். துபாயை பொறுத்தவரை தங்கம் விலை குறைவாக விற்பனையாகும் பகுதியாகும்.இங்கு அடிக்கடி சென்று வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.. அந்த வகையில் கண்காணிக்கப்பட்ட நடிகை ரன்யா ராவ் , வரும் போது எல்லாம் அதிக நகைகள் அணிந்து வந்துள்ளார். ஒரே ஆண்டில் 40 முறை துபாய் சென்று வந்ததை கவனித்துதான் டெல்லி அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளார்கள்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த 32 வயதாகும் நடிகை ரன்யா ராவ், கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார்.

ரன்யா ராவ் அண்மை காலமாக அடிக்கடி துபாய்க்கு சென்று வந்தார். அவர் வெறும் 15 நாட்களில் மட்டும் அவர் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். துபாய் சென்று திரும்பி வரும்போது அதிக அளவில் தங்க நகைகளை அணிந்து வந்திருந்தார். அவரை கடந்த இரண்டு நாள் முன்பு பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து டெல்லி நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.12 கோடியாகும். இதனிடையே வீட்டில் நடத்திய சோதனையில் 4.75 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என ஒட்டு மொத்தமாக ரூ.17.29 கோடிக்கு நகைகள், பணம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள் விசாரணையில் வெளியாகி உள்ளது. டெல்லி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம், நடிகை ரன்யா ராவ் துபாயில் தான் தொழில் செய்து வருவதாகவும், அதனால் தான் அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும் கூறியிருக்கிறார்
இதன்படி நடிகை ரன்யா ராவ் துபாயில் ஏதாவது தொழில் செய்கிறாரா என்று அவரது ஆவணங்களை சோதனை செய்த போது, அங்கு அவர் எந்த விதமான தொழிலையும் துபாயில் செய்யவில்லை என்பதும், வெறும் தங்கம் கடத்தலில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவின் தந்தை ஐபிஎஸ் அதிகாரி என்பதால், துபாயில் இருந்து அவர் பெங்களூர் வரும் போதெல்லாம், விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரே, அவரை வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள்
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரன்யா ராவ், தன்னிடம் அதிகாரிகள் சோதனை நடத்துவது இல்லை என்பதால், துபாயில் இருந்து பெரிய அளவில் தங்கத்தை அவ்வப்போது கடத்தி வந்தாராம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல். கடந்த 3-ந்தேதி ரன்யா ராவ் சிக்கினார். முன்னதாக ரன்யா ராவ் முதலில் தன்னை சோதனை செய்ய விடாமல் தடுத்ததோடு, டி.ஜி.பி.யின் மகள் எனக்கூறி வாக்குவாதம் செய்தாராம். ஆனாலும் ரன்யா ராவை சோதனை செய்த அதிகாரிகளுக்கு, 14 தங்க கட்டிகளை லெதர் ஜாக்கெட்டில் வைத்து, அதனை தனது தொடையில் சுற்றி கடத்தியது தெரியவந்தது.
அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் அவர் 40 முறையும், இந்த ஆண்டு இதுவரை 8 முறையும் அவர் துபாய்க்கு விமானத்தில் பறந்து சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை ரன்யா ராவ், துபாய் சென்று வந்த போது எல்லாம், ஒரே ஆடையை மட்டுமே அணிந்து சென்று வந்துள்ளார். தங்கத்தை உடலில் பதுக்கி கடத்தி வருவதற்கு ஏற்ப அந்த ஆடையை அவர் பிரத்யேகமாக தயார் செய்து அணிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை ரன்யா ராவ் மட்டும் இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பில்லை என்றும் நம்பும் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகிக்கிறார்கள்.
ஏனெனில் ரன்யா ராவ் கடத்தி வரும் தங்க கட்டிகளை வாங்கும் நபர்கள் யார் யார்?, துபாயில் தங்கம் வாங்க அவருக்கு பணம் வழங்கியது யார் யார்?, இந்த தங்க கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரித்து உண்மைகளை அறியும் முயற்சியில் டெல்லி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications