"டேய் எப்புட்றா.." வெறும் பத்தே நொடிகளில் உணவு டெலிவரி! அதுவும் பெங்களூரில்.. வியக்கும் நெட்டிசன்கள்
வெறும் பத்தே நொடிகளில் பெங்களூரில் உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் டெலிவரி செயலி மூலம் ஆர்டர் செய்த செயலி வெறும் பத்தே நொடிகளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன உலகில் ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாமே இணையத்தில் தான் நடக்கிறது. ஒரு நாள் இங்கு இணையச் சேவை முடங்கினால்.. கிட்டதட்ட பலரது வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லலாம்.
அந்தளவுக்கு இணையச் சேவை நமக்குப் பேருதவியாக உள்ளது.. சென்னை பெருவெள்ளம் உள்ளிட்ட சமயங்களில் இணையச் சேவை பாதிக்கப்பட்ட போது நாம் எந்தளவுக்குச் சிரமத்தை எதிர்கொண்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

உணவு டெலிவரி
அதேபோல இப்போது உருவாக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைத்துமே இணையத்தை மையமாக வைத்தே உள்ளன. அப்படி உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உணவு டெலிவரி நிறுவனங்கள் ரொம்பவே முக்கியமானது. இந்த உணவு டெலிவரி செயலிகள் நமது உணவு உண்ணும் முறையையே மாற்றிவிட்டது என்று சொல்லலாம். அதிரடி ஆப்பர்கள், வீட்டு வாசலுக்கே வந்துவிடும் உணவுகள் என்று பல வசதிகள் உள்ளதால் பலரும் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்கிறார்கள். நேரில் சென்று பார்செல் வாங்கும் முறையே இல்லாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.

பெங்களூர்
இருப்பினும், உணவு டெலிவரியில் நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை டெலிவரிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம்.. சில நேரங்களில் நாம் உணவை ஆர்டர் செய்து ஒரு மணி நேரம் கூட கழித்து உணவு வராது.. இது கடும் பசியில் உணவை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருப்பவர்களுக்கு செம கடுப்பை ஏற்படுத்தும்.. அதிலும் பெங்களூர் போன்ற டிராபிக் நெரிசல் படுமோசமாக உள்ள நகரங்களில் உணவு டெலிவரி எவ்வளவு லேட் ஆகலாம் என்பது குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை.

பத்தே நொடிகளில் டெலிவரி
ஆனால், பெங்களூரில் நபர் ஒருவருக்கு வெறும் 10 நொடிகளில் உணவு டெலிவரி நடந்துள்ளது.. ஆமாம்.. உண்மைதான்... 10 நிமிடங்கள் கூட இல்லை.. வெறும் 10 நொடிகளில் அவருக்கு உணவு டெலிவரி ஆகியுள்ளது.. டேய், எப்புட்றா என்று கேட்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இதன் வீடியோவே இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பெங்களூரில் வசிக்கும் கனடா நாட்டை சேர்ந்த நபருக்குத் தான் உணவு வெறும் 10 நொடிகளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
கனடா நாட்டை சேர்ந்த காலேப் ஃப்ரீசென் என்பவர் இப்போது பெங்களூரில் வசிக்கும் நிலையில், அவருக்குத் தான் நள்ளிரவில் திடீரென மெக்டொனால்டு உணவைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதையடுத்து அவர் பெங்களூரின் கோரமங்களாவில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்குச் சென்றுள்ளார்.. இருப்பினும் நள்ளிரவு ஆகிவிட்டதால் கடை மூடப்பட்டு இருந்தது.. உணவகம் மூடப்பட்டு இருந்தாலும் கூட டெலிவரி பாய்கள் உணவை வாங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் ஸ்விக்கி தளத்தில் இருந்து மெக்டொனால்டில் இருந்து உணவை ஆர்டர் செய்துள்ளார்.

அருகிலேயே டெலிவரி
அவர் உணவகத்திற்கு அருகிலேயே இருந்ததால் அங்கேயே கொடுத்துவிடும்படி செயலியில் போட்டுள்ளார். இந்த உணவை சஞ்சய் என்ற டெலிவரி பாய் பிக்அப் செய்ய வந்துள்ளார். உணவை பிக்அப் செய்த பிறகு எங்கே உணவைத் தர வேண்டும் என்பதைச் செயலியில் பார்த்துள்ளார். உணவைத் தர வேண்டிய இடமும் அருகிலேயே இருந்ததால் குழம்பிவிட்டார். இருப்பினும், காலேப் ஃப்ரீசென் அருகிலேயே இருந்ததால்.. சிரித்துக் கொண்டே உணவை வெறும் 10 நொடிகளில் டெலிவரி செய்துவிட்டார். இந்த மின்னல் வேக டெலிவரி குறித்த வீடியோவையும் காலேப் ஃப்ரீசென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ
காலேப் ஃப்ரீசென் மேலும் தனது ட்விட்டரில், "நள்ளிரவு கோரமங்களாவில் இருக்கும் மெக்டொனால்டுக்கு சென்றிருந்தேன்.. அவர்கள் கடையை மூடிவிட்டதாகச் சொன்னார்கள். இருப்பினும், டெலிவரி மட்டும் இருந்தது. நான் என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.. இதையடுத்து ஸ்விக்கி மூலம் நான் மெக்டொனால்டில் ஆர்டர் செய்தேன். வெறும் பத்தே நொடிகளில் டெலிவரி முடிந்தது.." என்று பதிவிட்டிருந்தார். இவ்வளவு அருகே டெலிவரி செய்வது இதுவே முதல் முறை என்று டெலிவரி பாய் சஞ்சயும் தெரிவித்தார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications