பசிக்கு உணவு கேட்ட 5 வயது சிறுமி! வளர்ப்பு தாய் செய்த கொடூரம்! கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் பசிக்கு உணவு கேட்ட 5 வயது சிறுமியின் உடலில் சூடுவைத்து கட்டிலில் கட்டிப்போட்டு கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் வாடி நகர் அருகே நால்வர் ஸ்டேஷன் தாண்டா அமைந்துள்ளது. இங்கு திப்பண்ணா என்பவர் வசித்து வருகிறார்.
திப்பண்ணாவுக்கு திருமணமாகி மனைவி, மகள் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவரது மனைவி இறந்தார். இதனால் திப்பண்ணா தனது 5 வயது மகள் நீலம்மாளுடன் வசித்து வந்தார்.

2வது திருமணம்
இந்நிலையில் திப்பண்ணா 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து மாரியம்மா என்பவரை திப்பண்ணா 2வது திருமணம் செய்தார். இதையடுத்து மாரியம்மாவுக்கு, நீலம்மா வளர்ப்பு மகள் ஆனார். வளர்ப்பு மகள் என்பதால் நீலம்மாவை, மாரியம்மாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது கணவர் இல்லாத நேரத்தில் அவர் சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

உணவு கேட்ட சிறுமி
இந்நிலையில் வேலை நிமித்தமாக திப்பண்ணா புனேவுக்கு சென்றார். இந்த வேளையில் மாரியம்மா, நீலம்மாவுக்கு சரியாக உணவு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமி பட்டினியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வயிற்று பசி தாங்க முடியாத சிறுமி நீலம்மா தனது வளர்ப்பு தாய் மாரியம்மாவிடம் உணவு கேட்டார்.

சூடுவைத்து கட்டிலில் கட்டிவைப்பு
அப்போது உணவு கொடுக்க மறுத்த மாரியம்மா, 5 வயது சிறுமியான நீலம்மாவின் உடலில் சூடு வைத்தார். மேலும் அவரை வெளியே எங்கேயும் செல்ல விடாமல் தடுக்கும் வகையில் கட்டிலில் கட்டிவைத்தார். இதற்கிடையே வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்து தொடர்ந்து அழுதார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் காலில் சூடு வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த வழக்கில் விரைவில் சிறுமியின் வளர்ப்பு தாய் மாரியம்மா கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications