"எல்லை மீறி போறீங்க.." பெங்களூரில் ரூ.40,000 இருந்தால் போதுமா.. வந்த கேள்வி.. கடுப்பான நெட்டிசன்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மாதம் ரூ. 40,000 இருந்தால் சமாளிக்க முடியுமா என்று இளம்பெண் ஒருவர் கேட்ட கேள்வி இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடக்கும் பல சம்பவங்கள் ரொம்பவே வினோதமாக இருக்கும். குறிப்பாக அங்கே வீடுகளை வாடகைக்கு எடுப்பதே பெரும் போராட்டமாக இருக்கம். அந்தளவுக்கு வீட்டு ஓனர்கள் கண்டிஷன்களை தெறிக்கவிடுவார்கள்.
இது ஒரு பக்கம் என்றால் இணையத்திலும் கூட பெங்களூர் எந்தளவுக்கு அதிக செலவை வைக்கும் நகரம் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இளம்பெண் ஒருவர் கேட்ட கேள்வி இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கேள்வி: ரெடிட் தளத்தில் பொதுவாக யாராவது ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்பார். அதற்குப் பலரும் பல வித பதில்களைக் கொடுப்பார்கள். இதில் வரும் கேள்விகள் பல நேரங்களில் டிரெண்டாகும். அப்படி சமூக வலைத்தளமான ரெட்டிட் தளத்தில் பெங்களூர் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி தான் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இதில் பெண் ஒருவர், தனது தாயுடன் சேர்ந்து பெங்களூரில் வாழ மாதம் ₹40,000 சம்பளம் போதுமா என்று கேட்டிருந்தார். அவரது இந்த கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

ரூ.40,000 சம்பளம்: இது குறித்து அவர், "பெங்களூரில் ரூ.40,000 சம்பளத்தில் ஒரு மகள் தன் தாயுடன் சேர்ந்து வாழ முடியுமா? நான் எனது 5 வயதில் தந்தையை இழந்துவிட்டேன். தாய் மட்டுமே என்னை வளர்த்தார். படிப்பை முடித்து இப்போது இரண்டு ஆண்டுகளாக நான் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தேன். இப்போது எனது ஆபிசில் அவர்கள் நேரல் வரச் சொல்லி வலியுறுத்துகின்றனர். இதற்காக நான் பெங்களூர் செல்ல வேண்டும்.
எனது அம்மாவுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு இருந்தது. அவர் நோயிலிருந்து குணமடைந்து 3 வருடங்கள் ஆகிறது. இப்போது அவரது உடல்நிலை பெரியளவில் பாதிப்பு இல்லை. பெங்களூர் சென்றால் நிதி நிலைமை மோசமாகுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. அதேநேரம் பெங்களூருக்கு சென்றால் எனது கேரியர் அடுத்த லெவலுக்கு செல்லும். எனக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வருகிறது. எனது தாயுடன் இருக்க இது போதுமா" என்று கேட்டுள்ளார்.

நெட்டிசன்கள்: இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பலரும் இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்றே பதிவிட்டுள்ளனர். மேலும், கேரியர் முக்கியம் என்பதால் தைரியமாகப் பெங்களூருக்கு செல்லுங்கள் என்றே பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர், "ரூ.40,000 போதாதா.. இதுபோல எப்படிதான் கேட்கிறார்களோ" என்று டென்ஷனாகியும் பதிலளித்து வருகிறார்கள். இன்னும் சிலர் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உங்கள் ஊதியத்தை விட எனது ஊதியம் குறைவு. எனது அம்மாவின் ஊதியத்தையும் எனது ஊதியத்தையும் சேர்த்தால் கூட ரூ.40000 வராது. இருப்பினும், என்னால் குடும்ப செலவுகளைக் கவனித்து பணத்தையும் சேமிக்க முடிந்தது. எனவே நீங்கள் தைரியமாகப் பெங்களூருக்கு செல்லலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு நபர், "இதை வைத்து தாராளமாக வசதியாகவே இருக்கலாம். பெங்களூரில் மாதம் ரு.2 லட்சம் சம்பாதித்தால் கூட பத்தாது என சொல்வபர்களை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்.. அவர்களுக்கு எவ்வளவு இருந்தாலும் போதாது" என்று பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் அந்த பெண்ணை தைரியப்படுத்தும் வகையிலேயே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications