கர்நாடக அரசியலில் அதிரி புதிரி ஆட்டம்:3-வது ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா- காங். நோக்கி ஓட்டம்?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜேடிஎஸ் கட்சி எம்.எல்.ஏ. சிவலிங்கே கவுடா இன்று தமது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சிவலிங்கே கவுடா இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் ஒரே வாரத்தில் ராஜினாமா செய்யும் 3-வது ஜேடிஎஸ் எம்.எல்.ஏ சிவலிங்கே கவுடா.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ந் தேதி கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன. ஆளும் பாஜக, ஆட்சியை தக்க வைக்க பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறது. எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்பது ஆகப் பெரும் காங்கிரஸின் நம்பிக்கை. கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான்; நமக்கு காத்திருக்கிறது முதல்வர் பதவி என கனவில் மிதக்கிறது ஜேடிஎஸ். ஜேடிஎஸ், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால்விடும் வகையில் ஆம் ஆத்மி கட்சி, ஓவைசி கட்சி, தெலுங்கானா பிஆர்எஸ் கட்சி ஆகியவையும் தலைகாட்டுகின்றன.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே கர்நாடகாவில் கட்சி தாவல் சம்பவங்கள் கனஜோராக நடந்து வருகின்றன. தங்களது கட்சி எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் வளைத்துக் கொண்டு இருக்கிறது என முதல்வர் பசவராஜ் பொம்மை பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இதனை காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மறுத்திருந்தார்.
இந்நிலையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக எம்.எல்.ஏ. என்.ஒய். கோபாலகிருஷ்ணா தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு காங்கிரஸில் இணைய முடிவெடுத்தார். காங்கிரஸ் கட்சியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருதார் கோபாலகிருஷ்ணா. 2018-ல் சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு தாவி எம்.எல்.ஏ.வானவர் கோபாலகிருஷ்ணா. ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. ராமசாமியும் தமது பதவியை ராஜினாமா செய்தார். ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையான ஹாசன் பிராந்தியத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவருக்கு இம்முறை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து விலகினார். எந்த கட்சி சீட் கொடுத்தாலும் போட்டியிடுவேன் என்றார் ராமசாமி. அதேபோல ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. எஸ்.ஆர் சீனிவாஸ் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.
இந்த வரிசையில் ஜேடிஎஸ் கட்சி மற்றொரு எம்.எல்.ஏ. சிவலிங்கே கவுடா இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் பதவியை ராஜினாமா செய்த 3-வது ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. சிவலிங்கே கவுடா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications