கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு.. தலித்கள் அதிகம் என தகவல்.. லிங்காயத் சமூகம் கொதிப்பு
பெங்களூர்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை அம்மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை. எனினும், கர்நாடாகாவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க சமூகங்களாக இருக்கும் லிங்காயத், ஒக்காலிக்கா சமூகங்கள் சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ரூ.160 கோடி செலவிடப்பட்டது. 2018-ல் ஆட்சி மாறியது. அதன்பிறகு வந்த பாஜக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சித்தராமையா மீண்டும் முதல்வர் ஆகியுள்ளார். அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்பேன் என்று கூறினார். இதற்கு லிங்காயத், ஒக்காலிக்கா சமூகங்களின் மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும், அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அந்த கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாக நடத்தப்படவில்லை என்றும், அதனால் அதை எக்காரணம் கொண்டும் அரசு ஏற்கக்கூடாது என்றும் லிங்காயத், ஒக்காலிக்கா சங்க நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின சமூகங்களின் நிர்வாகிகள், சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் அந்த அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வதில் நீண்ட காலமாக இழுபறி நிலை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையாவை விதான் சவுதாவில் கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே நேற்று நேரில் சந்தித்து, இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை 9 ஆண்டுகளுக்கு பிறகு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை என்னிடம் தாக்கல் செய்துள்ளனர். இதில் என்ன விவரங்கள் உள்ளது என்று எனக்கு தெரியாது. இதை கேபினட்டில் தாக்கல் செய்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதுபற்றி பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே கூறும்போது, "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துவிட்டோம். அதை செயல்படுத்துவது குறித்து இனி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார். இந்த அறிக்கையை கர்நாடக அரசு வெளியிட்டால், நாட்டிலேயே பீகாரை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்ட 2-வது மாநிலம் என்ற பெயர் கர்நாடகத்தை சேரும்.
சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள விவரங்கள், கர்நாடகாவில் பெருமளவில் உள்ள ஒக்காலிக்காா மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு அதிருப்தியை கொடுக்கும் விதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடாகாவில், பட்டியலின மக்கள்தான் அதிகம் இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து முஸ்லீம் இருக்கும் விவரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வரிசையில், லிங்காயத் மற்றும் ஒக்கலிக்க சமூகத்தினர் அடுத்தடுத்த இடங்களில் வருவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. லிங்காயத் மற்றும் ஒக்காலிக்கா சமுகத்தை சேர்ந்தவர்கள், அரசு மேற்கொண்ட சாதி வாரி கணக்கெடுப்பு அறிவியல்பூர்வமானதாக இல்லை என்றும் அறிக்கை ஆபத்துக்கள் நிறைந்தது எனவும் கூறி வருகின்றன.












Click it and Unblock the Notifications