முடிவுக்கு வரும் மகளிர் இலவச பயணம்? நிதி நெருக்கடியால் கர்நாடக அரசு முடிவு? சித்தராமையா சொல்வது என்ன
பெங்களூர்: தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பெண்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யச் சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தைக் கர்நாடக அரசு வாபஸ் பெற இருப்பதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவிய நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை திமுக வாக்குறுதியாக முன்வைத்தது. அதேபோல ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இலவச பயணம்: இத்திட்டத்திற்குப் பெண்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் இதை வாக்குறுதியாக முன்வைத்தது. அதற்குப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது போலவே சக்தி என்ற இந்த இலவச பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு அங்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. இருப்பினும், பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வருவாயை அதிகரிக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்த சக்தி மகளிர் இலவச பயணத் திட்டத்தைக் கர்நாடக அரசு வாபஸ் பெற உள்ளதாகத் தகவல் வெளியானது.
சித்தராமையா விளக்கம்: இது கர்நாடகாவில் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார். தற்போதைய சூழலில் மகளிர் இலவசத் திட்டத்தை நிறுத்தும் எந்தவொரு திட்டம் எதுவும் இல்லை என்பதைக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக அரசிடம் இதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை. கர்நாடகாவில் உள்ள சில பெண்கள் கூறிய கருத்துகளை மட்டுமே டிகே சிவக்குமார் குறிப்பிட்டார். இத்திட்டத்தை நிறுத்துவது குறித்து நாங்கள் பரிசீலிக்கக் கூட இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்: கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் கிட்டதட்ட இதே கருத்துகளைத் தான் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "நாங்கள் ஆட்சியை அமைத்தது முதல் சக்தி திட்டம் அமலில் இருக்கிறது. எங்கள் ஆட்சியில் இத்திட்டம் தொடரும் அடுத்த தேர்தலிலும் நாங்கள் ஆட்சியைத் தக்கவைப்போம். இதன் மூலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு இது தொடரும். இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2018ல் பாஜக 600 வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், 60ஐ மட்டுமே நிறைவேற்றினர்" என்றார்.
என்ன காரணம்: முன்னதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கடந்த புதன்கிழமை இந்த மகளிர் இலவச பயணம் குறித்து சில கருத்துகளைக் கூறியிருந்தார். அதுவே இத்திட்டம் நிறுத்தப்பட உள்ளதாகத் தகவல் பரவ காரணமாக அமைந்தது. அவர் கூறுகையில், "பெண்கள் சிலர் தங்கள் பஸ் டிக்கெட் எடுக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் போக்குவரத்து செலவுக்குத் தனியாகப் பணம் கொடுக்கிறது. அந்த நிறுவனங்களில் பணிபுரிவோர் பணம் செலுத்தத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் இலவச சேவையைப் பயன்படுத்தும் பெண்களில் 5 முதல் 10% தான். ஆனாலும், அவர்கள் டிக்கெட் கட்டணம் செலுத்த ரெடியாக உள்ளனர். இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் பேசி இறுதி முடிவு எடுப்போம். பெண்கள் இப்படிச் சொல்வதைக் கருத்தில் கொண்டே ஆலோசிக்கிறோம். அதேநேரம் எந்தவொரு முடிவும் இதில் நாங்கள் எடுக்கவில்லை" என்றார்.
விளக்கம்: டிகே சிவக்குமாரின் இந்தக் கருத்தை வைத்தே மகளிர் இலவச பயணத் திட்டத்தைக் கர்நாடக அரசு முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் சாடினர். தேர்தல் முடிந்தவுடன் மகளிர் இலவச பயணத் திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துவிட்டதாக அங்குள்ள பாஜக மற்றும் ஜேடியு சாடினர். இதையடுத்து டிகே சிவக்குமாரும் தனது கருத்துக்கு விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் இலவச பேருந்து திட்டத்தை வாபஸ் பெற உள்ளோம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. சிலர் தங்கள் நிறுவனங்கள் இதற்கான பணத்தைத் தருவதால் டிக்கெட் கட்டணத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். இதனால் இதைப் பரிசீலிக்கிறோம் என்று மட்டுமே குறிப்பிட்டேன். சக்தி திட்டம் உட்பட நாங்கள் முன்வைத்த 5 திட்டங்களும் தொடரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications