அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா? இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்த முதல் எதிர்வினை
பெங்களூர்: இது கர்நாடகா, உங்களுக்கு கன்னடம், ஆங்கிலம் தெரியும் என்று நம்புகிறேன், தயவுசெய்து எனது கன்னட அறிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். முன்னதாக உள்துறையில் அனைத்து கோப்புகளையும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஒரு வாரம்முன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமித்ஷா அப்போது வெளியிட்ட பதிவில், "அனைத்து இந்திய மொழிகளும் பெருமையும் பாரம்பரியமுமிக்கது. அவற்றை வளப்படுத்தாமல் நாம் முன்னேற முடியாது. அலுவல் மொழியான இந்தி, ஒவ்வொரு இந்திய மொழியுடனும் பிரிக்கமுடியாத உறவைக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு, இந்தி மொழி நாட்டின் அலுவல் மொழியாக பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.. அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து இந்தி திவாஸ் நிகழ்வில் நான்காவது அகில் பாரதிய ராஜ்பாஷா சம்மேளனத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது, " இந்தி மொழி கடந்த 75 ஆண்டுகளில் பல ஏற்றததாழ்வுகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில், எந்த உள்ளூர் மொழியுடனும் இந்திக்கு போட்டி இல்லை என்று என்னால் உறுதியாக கூறிவிட முடியும். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன் மற்றும் அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்கிறது.
இந்தியாவின் மாநில மொழிகளான குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, வங்காளம் என ஒவ்வொரு மொழியும் இந்தியையும், அதுபோல் இந்தி ஒவ்வொரு மொழியையும் பலப்படுத்துகிறது. இந்தியை வலுப்படுத்துவதன் மூலம், இந்த மொழிகள் அனைத்தும் நெகிழ்வானதாகவும் வளமானதாகவும் மாறுகிறது. எனது துறையில் உள்ள அனைத்துத் தகவல் தொடர்புகளையும் கோப்புகளையும் இந்தியில் மாற்ற எனக்கு 3 ஆண்டுகள் ஆகியது. உள்துறையில் எந்தக் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை" இவ்வாறு அமித்ஷா கூறியிருந்தார்.
இதன் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அலுவல் கோப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியில் மாற்றிய அமித்ஷாவின் செயலுக்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஏனெனில் இந்தியாவில் அழுவல் மொழியாக ஆங்கிலம் தொடரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உள்துறை அலுவலகத்தில் எந்தக் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை என்று கூறியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்தி பேசாதா மாநிலங்களில் ஒன்றான கர்நாடாகவிலும் எதிர்வினை வந்திருக்கிறது. கர்நாடகாவில் இந்திக்கு கடும் எதிர்ப்பு நீண்ட காலமாகவே உள்ளது. கர்நாடகாவில் கன்னடம் தான் முதன்மையான மொழி என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். இதேபோல் அங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியலை தாண்டி, மொழி விஷயத்தில் ஒற்றுமையாக உள்ளன.
இந்த சூழலில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அறிக்கையை தந்தார். அந்த அறிக்கை கன்னடத்தில் இருந்தது. ஆங்கிலத்தில் தாருங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், இது கர்நாடகா, உங்களுக்கு கன்னடம், ஆங்கிலம் தெரியும் என்று நம்புகிறேன், தயவுசெய்து எனது கன்னட அறிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதன் மூலம் கன்னடத்தில் தான் இனி எல்லாமே வரும் என்று கர்நாடகா அரசும் தெரிவிப்பதாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கூறும் போது, இது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் வந்த வினை. அவர் தன் அலுவலக கோப்புகளை முழுவதுமே இந்திமொழியில் தான் வெளியிட்டுள்ள நிலையில். இவ்வாறாக இந்திமொழி பேசாத மாநிலங்கள் வேறுவிதமாக சிந்திக்க தொடங்கியது என்றே கருதுகிறேன் என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட அதுபோல் தான் இருப்பதாக நெட்டிசன்களும் கருத்துக்களை ஆமோதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications