வசமாய் சிக்கிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி.. பெங்களூரில் விதிமீறிய பள்ளி.. பறந்த நோட்டீஸ்! அதிரடி
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, தற்போது ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் எம்எஸ் தோனிக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் இருந்து நோட்டீஸ் ஒன்று பறந்துள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் எம்எஸ் தோனி. தனது அதிரடியான ஆட்டம், பினிஸிங், இக்கட்டான சூழலில் தனது சிறப்பான யுக்தி மூலம் எதிரணியினருக்கு சிம்மசொப்பணமாக எம்எஸ் தோனி இருந்தார்.
அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை எம்எஸ் தோனியிடம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தான் அவர் சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

சிஎஸ்கே கேப்டனாக தோனி
தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ் தோனி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். இந்த தொழில்களை எம்எஸ் தோனி, அவரது மனைவி சாக்சி மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரில் தோனி பள்ளி
அதன்படி அண்டை மாநிலமாக கர்நாடகாவில் எம்எஸ் தோனிக்கு சொந்தமான பள்ளிக்கூடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பெங்களூர் எச்எஸ்ஆர் எக்ஸ்டென்சன் அருகே கூட்லுகேட் பகுதியில் எம்எஸ் தோனி குளோபல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மென்டர் பட்டியலில் எம்எஸ் தோனியின் பெயர் உள்ளது. இந்நிலையில் தான் பள்ளிக்கு அனுமதிகோரி கர்நாடகா கல்வித்துறையில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2021-2022ம் ஆண்டில் இந்த பள்ளி திறக்கப்பட்டது. பள்ளியில் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. மொத்தம் 248 மாணவர்கள் படிப்பதாக கூறப்படுகிறது.

கல்வித்துறை சார்பில் நோட்டீஸ்
கர்நாடகா பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளி செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அங்கு அனுமதியின்றி விதிகளை மீறி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடங்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது விதிமீறலாகும். இதனால் அவரது பள்ளிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய புகார் எழுந்த நிலையில் விளக்கம் கேட்டு எம்எஸ் தோனியின் எம்தோனி குளோபல் பள்ளிக்கு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை பெங்களூர் தெற்கு மண்டல பிளாக் கல்வித அதிகாரி அனுப்பி உள்ளது.

அனுமதியே இல்லையாம்
இதுபற்றி பெங்களூர் தெற்கு டிடிபிஐ(Deputy Director of Public Instruction) அதிகாரி பைலாஞ்சனப்பா கூறுகையில், ‛‛எம்எஸ் தோனி குளோபல் பள்ளிக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மாநில அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்தது. ஆனால் 2021-22ம் கல்வியாண்டில் அங்கீகாரம் இன்றி வகுப்புகளை தொடங்கியது. இந்த பள்ளி ஒருபோதும் மாநில கல்வி வாரியம் அல்லது மத்திய கல்வி வாரியங்களுடன் இன்னும் இணைக்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்'' என்றார்.

சிக்கியது எப்படி?
பெங்களூர் ஆர்சிட் இன்டர்நேஷனல் நிர்வாகத்தின் சார்பில் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் நாகரபாவியில் உள்ள பள்ளியில் சிபிஎஸ்இ சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது மாநிலத்தில் பல இடங்களில் இத்தகைய விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை தீவிரமடைந்தது. இந்த விசாரணையில் தான் எம்எஸ் தோனியின் பள்ளியும் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

700 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
மேலும் கர்நாடகா பாடத்திட்டத்தில் பள்ளி துவங்குவதாக கூறிவிட்டு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ கல்வி வாரியங்களில் பாடங்கள் நடத்தியது அல்லது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ கல்வி வாரியங்களில் பாடத்திட்டங்களில் கல்வி போதிப்பதாக கூறி மாணவர்களை ஏமாற்றி மாநில பாடத்திட்டத்தை கற்பித்து கொடுத்த புகாரில் 700 பள்ளிகளுக்கு கர்நாடகா கல்வித்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதில் 600 பள்ளிகள் பெங்களூரில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications