‛வெள்ளி குத்துவிளக்குகள்’.. வாக்காளர்களுக்கு லஞ்சம்.. வசமாய் சிக்கிய கர்நாடகா பாஜக அமைச்சர்! வழக்கு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி தொழிற்சாலை பணியாளர்களின் குடியிருப்பில் 963 வெள்ளி குத்து விளக்குகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த நிலையில் பாஜக அமைச்சர் முருகேஷ் நிரானி வசமாக சிக்கினர். அவர் மீது முக்கிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 963 குத்து விளக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வரும் நிலையில் மீண்டும் மாநிலத்தில் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதேபோல் தொங்கு சட்டசபை உருவானால் கிங்மேக்கராக மாறி அரியணையில் ஏற ஜேடிஎஸ் கட்சியும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இதுதுவிர ஆம்ஆத்மி கட்சியும் வழக்கம்போல் தேர்தல் கோதாவில் குதித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆத்ஆத்மி கட்சிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் எப்படியாவது சில தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி களப்பணி ஆற்றி வருகிறது. இதுதவிர பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்பட ஏராளமான கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.
பரிசு பொருட்கள்: இந்நிலையில் தான் வழக்கம்போல் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வினியோகிப்பது தொடங்கி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அரசியல் கட்சியினர் பணத்தை வாக்காளர்களுக்கு கையில் வழங்காமல் போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வழியாகவும் வழங்க வாய்ப்புள்ளது என்பதால் தேர்தல் அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தீவிர சோதனை: மேலும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், கார்கள் முதல் சாதாரண மக்களின் வாகனங்களை பறக்கும்படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வேளையில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததில் இருந்து அதாவது மார்ச் 29ம் தேதியில் இருந்து தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் முருகேஷ் நிரானி: இந்நிலையில் தான் முதல்வர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராக முருகேஷ் நிரானி உள்ளார். இவர் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் அந்த தொகுதியில் பாஜக சார்பில் முருகேஷ் நிரானி களமிறங்கி உள்ளார்.
குத்து விளக்குகள்: இந்நிலையில் தான் முதோல் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட அவரது தொழிற்சாலை பணியாளர்களின் குடியிருப்பில் இருந்து வெள்ளி குத்துவிளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குத்து விளக்குகள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய அங்கு பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பொருட்களை முதோல் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு என்பது ரூ.21.45 லட்சம் ரொக்கம், 28 கிலோ எடை கொண்ட 963 வெள்ளி குத்துவிளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவு: இதுதொடர்பாக முதோல் போலீசார் அமைச்சர் முருகேஷ் நிரானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 171 எச் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் தொடர்பாக சட்டவிரோதமாக பேமெண்ட் செய்தல் என்ற அடிப்படையில் அமைச்சர் முருகேஷ் நிரானி மீது வழக்குப்பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொத்த பறிமுதல்: கர்நாடகா மாநிலத்தில் மார்ச் 29ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றதாக ரூ.253 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒருநாளில் மட்டும் முருகேஷ் நிரானியிடம் பறிமுதல் செய்யப்பட்டதை தவிர ரூ.1.82 கோடி ரொக்கம், ரூ.37.64 லட்சம் பரிசு பொருட்கள், ரூ.45.25 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின. இதுவரை மொத்தம் ரூ.82.05 கோடி ரொக்கம், ரூ.19.69 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள், ரூ.56.67 கோடி மதுபானங்கள், ரூ.16.55 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.73.8 கோடி மதிப்புள்ள 145.55 கிலோ தங்கம், ரூ.4.28 கோடி மதிப்புள்ள 610 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications