“ட்விஸ்ட்”.. பாஜக - ஜேடிஎஸ் சீட் ஷேரிங் ஓவர்? அது அவரது தனிப்பட்ட கருத்து.. பட்டென சொன்ன குமாரசாமி!
பெங்களூரு: பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளதாகவும், 4 சீட் கொடுக்க அமித் ஷா சம்மதித்துள்ளதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறிய நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. எனவே வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு இடையேயான யுத்தம் என்றாகி உள்ளதால், கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

அந்தவகையில், கர்நாடகாவில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடா, ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரைச் சந்தித்துள்ளார். பாஜக - மஜத கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது.
முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித் ஷா சம்மதித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
மறுபுறம், ஜேடிஎஸ் ஐந்து இடங்களைக் கேட்பதாகக் கூறப்பட்டது. ஜேடிஎஸ் கட்சி, மாண்டியா, ஹாசன், துமகுரு, சிக்பள்ளாப்பூர் மற்றும் பெங்களூர் ரூரல் ஆகிய மக்களவைத் தொகுதிகளைக் கோருகிறது எனக் கூறப்பட்டது. ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்தால், கர்நாடகாவில் அதிகமாக உள்ள வொக்கலிகர் இன மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என பேச்சுகள் எழுந்தன. இந்தக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி, "எடியூரப்பா நேற்று கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. நாங்கள் இரண்டு மூன்று முறை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளோம். என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் முரண்படக்கூடிய கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்றும் எனவே, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த குமாரசாமி, "பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் காரணமே மக்கள்தான். மக்களுக்கு இது தேவையாக உள்ளது. கடந்த 2, 3 மாத கால காங்கிரஸ் ஆட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது, மாநிலத்தைக் கொள்ளையடிக்கிறது. மக்கள் மாற்று வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
கர்நாடக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். அது எனக்குத் தெரியும். கர்நாடக காங்கிரஸ் கட்சி உள்ளுக்குள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது" எனத் தெரிவித்தார். மேலும், பாஜக உடன் கூட்டணி ஏற்படுமானால், உங்கள் தொண்டர்களை எவ்வாறு இதற்கு சம்மதிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த குமாரசாமி, அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 2006ல் நான் பாஜகவோடு கைகோர்த்துள்ளேன். அப்போது 20 மாத காலம் நான் முதல்வராக இருந்துள்ளேன். அந்த 20 மாத நிர்வாகத்தின் காரணமாக என் மீது நல்லெண்ணம் உருவானது" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
