ஆபரேஷன் "லோட்டஸ்.." தேர்தலுக்கு பிறகு கவிழும் சித்தராமையா அரசு? பரபர குற்றச்சாட்டு! அதிரும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாஜக ஆபரேஷன் லோட்டஸை செயல்படுத்தத் தொடர்ந்து முயன்று வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் மொத்தம் இரண்டு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருக்கும் மாநிலம் என்பதால் இந்த லோக்சபா கர்நாடகாவுக்கு முக்கியமானதாக மாறி இருக்கிறது.
சித்தராமையா: இதற்கிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா மிகப் பெரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது கர்நாடகாவில் 'ஆபரேஷன் லோட்டஸை செயல்படுத்த பாஜக முயல்வதாகப் பரபர குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். தனது ஆட்சி அமைந்தது முதலே காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் மக்கள் இழுக்க பாஜக முயன்று வருவதாகவும் இதற்காக ரூ.50 கோடி வழங்கக் கூட தயாராக இருப்பதாகவும் அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஓராண்டாக முயற்சி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சித்தராமையா தலைமையிலான அரசு கவிழும் என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். சித்தராமையா மேலும் கூறுகையில், "கடந்த ஒரு வருடமாக எனது அரசை உடைக்க அவர்கள் முயன்று வருகின்றனர். எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ. 50 கோடி வரை வழங்கத் தயாராக இருந்தார்கள். இருப்பினும், அவர்களால் முடியவில்லை. எனது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்தனர்" என்றார்
லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதே என்ற கேள்விக்கு அவர், "நிச்சயம் அதுபோல நடக்காது.. ஒரே ஒரு எம்எல்ஏ கூட எங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள். காங்கிரஸ் அரசு நிச்சயம் 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்" என்றும் சித்தராமையா உறுதிப்படக் கூறினார்.
பாஜக பதில்: அதேநேரம் சித்தராமையாவின் இந்த குற்றச்சாட்டை அம்மாநில பாஜக முழுமையாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பாஜக எம்பி பிரகாஷ் கூறுகையில், "அவர் தனக்கு ஆதரவான மக்களிடம் இருந்து அனுதாபத்தைப் பெற இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். மாநிலத்தில் இப்போது பல பிரச்சினைகள் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு. சித்தராமையா தொடர்ந்து இல்லாத ஒன்று குறித்துப் பேசி வருகிறார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 28 இடங்களை வெல்வதில் சித்தராமையா கவனம் செலுத்தவில்லை.. மாறாகத் தேர்தலுக்குப் பிறகுத் தனது ஆட்சியைத் தக்கவைக்க மட்டுமே அவர் யோசித்து வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
கர்நாடகா தேர்தல்: கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா இடங்கள் உள்ளன. அதில் 14 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 14 இடங்களில் வரும் மே 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கே இந்த முறை காங்கிரஸ் தனித்துக் களமிறங்குகிறது. அதேநேரம் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து பாஜக அங்கே களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications