"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை விட்டால் ஆள் இல்லை" மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்
பெங்களூர்: "காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை விட்டால் வேறு ஆள் கிடையாது. அவரை தலைவர் பதவியை ஏற்குமாறு தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை இல்லாமல் இயங்கி வருகிறது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். எனினும், உடல்நிலை காரணமாக அவரால் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. எனவே, காங்கிரஸுக்கு நிரந்தரத் தலைவர் தேவை என கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். அதில் ஒருசாரார், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதனை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார்.

இந்த சூழலில், வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் காங்கிரஸுக்கு நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் தலைவராக வேண்டும் என ஒருதரப்பு தலைவர்களும், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் தலைவராக வேண்டும் என மற்றொரு தரப்பு தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து நேற்று அதிரடியாக விலகினார். இதுதொடர்பான தனது ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி இருந்தார். குறிப்பாக, ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும், அவரது குழந்தைத்தனமான நடவடிக்கைகள் காரணமாகவே 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும் குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார்.
குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமாவும், ராகுல் காந்தி மீதான அவரது குற்றச்சாட்டுகளும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வரக் கூடாது என்ற வாதத்துக்கும் இது வலுசேர்த்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸுக்கு யார் புதிய தலைவராக வரப் போகிறார்கள் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பெங்களூரில் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வரக் கூடியவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்தவராக, பரீட்சயமான நபராக இருக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், மேற்கு வங்கம் முதல் குஜராத் வரையிலும் மக்கள் செல்வாக்கை அந்த நபர் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவர் காங்கிரஸில் இப்போது யார் இருக்கிறார்கள்? அப்படி யாரும் இல்லை என்பதே நிதர்சனம்.
ராஜீவ் காந்தி மரணத்துக்கு பிறகு கட்சியை வழிநடத்துமாறு சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அதனால் அவர் காங்கிரஸ் தலைவர் ஆனார். அதேபோல, ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு மூத்த தலைவர்கள் வலியுறுத்துவோம். கட்சியின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்த்து போராடுவதற்காகவும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வர வேண்டும்.இதற்காக அவரை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


Click it and Unblock the Notifications
