பெங்களூர் ஐடி ஊழியருக்கு நடந்த கொடூரம்.. காரில் இருந்து சிகரெட் கேட்ட தனியார் நிறுவன மேனேஜர் செய்த படுபாதக செயல்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில், இளைஞர் விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரில் இருந்து கொண்டே சிகரெட் கேட்ட தனியார் நிறுவன மேனேஜருக்கு மறுப்பு தெரிவித்த ஐடி ஊழியரை, அந்த மேனேஜர் காரை ஏற்றி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்ளை பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள ஐடி நிறுவனத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். இதனால், நாட்டின் சிலிகான் வாலி என்ற பெருமையும் பெங்களூருக்கு உள்ளது. பெங்களூரை பொறுத்தவரை சமீப காலமாக கொலை குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது பெங்களூரில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழப்பு
இத்தகைய சூழலில் தான் கொடூர சம்பவம் ஒன்று பெங்களூரில் நடைபெற்றுள்ளது. அதாவது, பெங்களூர், வஜ்ரஹள்ளியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 29). தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். வொர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்த படியே அவர் பணியாற்றி வந்து இருக்கிறார். கடந்த 10 ஆம் தேதி அதிகாலை தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் பெங்களூர் கனகபுரா மெயின் ரோடு பகுதி அருகே உள்ள டீக்கடை ஒன்றிற்கு சஞ்சய் சென்றார்.
பின்னர் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது அவர்கள் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சஞ்சய்யும், கார்த்திக்கும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிகரெட் வாங்கி கொடுக்காததால்
விபத்து நடந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கார் வேண்டும் என்றே பைக் மீது மோதியது தெரியவந்தது. இதையடுத்து காரின் எண்ணை வைத்து காரை ஒட்டியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் உண்மை வெளியானது.
அதாவது, மாகடி ரோட்டை சேர்ந்த பிரதீக் (வயது 30) என்பவர்தான் இந்த கொடூர கொலையை செய்து இருப்பதும், தனியார் நிறுவனத்தில் மேலாளாராக பணிபுரியும் அவர், சம்பவத்தன்று சஞ்சய் மற்றும் கார்த்திக்குடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார். அவர்கள் இருவரும் டீக்கடையில் நின்று டீ குடித்த போது, காரில் வந்த பிரதீக், காரில் இருந்து கொண்டே சிகரெட் வாங்கி தருமாறு கேட்டு இருக்கிறார்.
மேனேஜரை கைது செய்த போலீஸார்
காரில் இருந்து கொண்டே கேட்டதால் கோபம் அடைந்த சஞ்சய் இது பற்றி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதனம் செய்து வைத்தனர். ஆனாலும் கோபம் தணியாத பிரதீக் காரில் சென்ற போது வஞ்சகத்துடன் இருந்துள்ளார். இதனால், காரை நிறுத்திவிட்டு சஞ்சய், கார்த்திக் வரட்டும் என காத்திருந்துள்ளார்.
அப்போது, அவர்கள் இருவரும் பைக்கில் கிராஸ் செய்து சென்றுள்ளனர். இதை பார்த்த பிரதீக், அவர்கள் சென்ற பைக் மீது காரை கொண்டு மோதினார். இதில் சஞ்சய் பலியானார். கார்த்திக்கிற்கு மருத்துவமனியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக பிரதீக்கை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications