‛‛122’’.. கர்நாடகாவில் அரியணை ஏறும் காங்கிரஸ்.. ஆட்சியை இழக்கும் பாஜக! பரபர எக்சிட் போல் ரிசல்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இந்நிலையில் தான் நேற்று இரவு வெளியான ஒரு கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக தேர்தலில் பின்னடைவை சந்தித்து ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி நேற்று கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. மொத்தம் 72.67 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலானா கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக மாறலாம். ஆனால் ஆட்சியை பிடிப்பதற்கான 113 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவித்தன. அதேபோல் பாஜகவும் குறைந்தது 80 முதல் அதிகபட்சமாக 104 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மாறாக இந்தியா டுடே கருத்து கணிப்பு மட்டும் காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியிருந்தது. இந்நிலையில் தான் Small Box India எனும் அமைப்பு சார்பில் கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்படி கர்நாகாவில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 115 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 115 முதல் 123 இடங்களில் ஜெயிக்கும் என இந்த கருத்து கணிப்பு கூறியுள்ளார்.

மாறாக ஆளும் பாஜக 75 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் அந்த கட்சியில் இணைந்த நிலையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்தது. இந்நிலையில் தான் அதிகபட்சமாக பாஜக 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு கூறி உள்ளது.
அதேபோல் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 22 முதல் 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், மற்றவர்கள் 1 முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 சதவீத ஓட்டுகளையும், பாஜக 38 சதவீத ஓட்டுகளையும், ஜேடிஎஸ் கட்சி 15 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் 6 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' அமைப்பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பை வெளியிட்டுள்ள ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' இதற்கு முன்பும் சில தேர்தல்கள் பற்றி கணித்து கூறியது. சமீபத்தில் நடந்த குஜராத், இமாச்சல் பிரதேசம் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல்கள் பற்றி கணித்து கூறியது பலித்தது. குஜராத்தில் பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிகள் ஜெயிக்கும் என கூறிய நிலையில் அது அப்படியே நடந்தது என்பது குறிப்பிடத்த்க்கது.












Click it and Unblock the Notifications