கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சி.. ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 24 கொரோனா நோயாளிகள் பலி
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 24 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
நாடு முழுக்க கொரோனா நோய்த்தொற்று அதிகரித்த நிலையில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்கள் மூலமாக பல்வேறு நகரங்களுக்கும் ஆக்சிஜன் சப்ளை மத்திய அரசால் செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. பல்வேறு மருத்துவ மனைகளும் ஆக்சிஜன் இல்லை என்று கை விரிப்பதால், கொரோனா நோயாளிகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெங்களூர் சம்பவம்
சில நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் இளைஞர் ஒருவர் ஆக்சிஜன் பெட் கிடைக்காமல், பல்வேறு மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ் மூலமாக சுற்றி திரிந்தபோது நடு வழியிலேயே பரிதாபமாக பலியான சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாம்ராஜ்நகர் மாவட்டம்
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 கொரோனா நோயாளிகள் நேற்று இரவு பலியாகி உள்ளனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு நேற்று இரவு சுமார் 11.45 மணி அளவில் ஆக்ஸிஜன் சப்ளை திடீரென நின்று போயுள்ளது. இதையடுத்து மூச்சுத்திணறல் காரணமாக வரிசையாக 22 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மைசூர் கலெக்டர்
இதனிடையே இந்த மாவட்டத்தின் அருகேயுள்ள மைசூர் மாவட்டத்திற்கு ஆக்சிஜன் திருப்பிவிடபட்டதாகவும் எனவேதான் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மைசூர் மாவட்ட கலெக்டர் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மைசூர் மாவட்ட கலெக்டரை செய்தியாளர்கள் தொடர்பு கொள்ள முற்பட்டபோது, அவர் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு
கர்நாடக அரசு நிர்வாகம் மொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ளதுதான் இதுபோன்ற குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த முதல்வர் எடியூரப்பா பெங்களூரில், கொரோனா நோய் பாதிப்பு கைமீறிப் போய்விட்டது, அனைத்து மக்களும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும், நான் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

கை கூப்பும் முதல்வர்
முதல்வராக இருப்பவர் முன்கூட்டியே கணித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் வந்து கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பெங்களூரில் இருந்து பல்வேறு மக்களும் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர். எனவே, மாவட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திணறும் கர்நாடக அரசு
பெங்களூரில் கூட மருத்துவ கட்டமைப்பை சரியாக செய்ய முடியாத மாநில பாஜக அரசு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், மேலும் மேலும் திணறத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 22 உயிர்கள் அநியாயமாக பறிபோய் உள்ளன. இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு கர்நாடக அரசியலில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications