"பசுக்களை கொல்வதில் என்ன தவறு!" கர்நாடக அமைச்சர் சொன்னதும் பாய்ந்த பாஜக! சித்தராமையா விளக்கம் என்ன
பெங்களூர்: பசு வதை குறித்து கர்நாடக அமைச்சர் கூறிய கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருந்தது. அதற்கு முன்பு வரை அங்கே பாஜக ஆட்சியே நடந்து வந்த நிலையில், அப்போது அங்கே பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு அப்போதே அங்கிருந்த காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. அதன்படி முன்பு ஆட்சியில் இருந்த பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்களில் ஒன்று தான் பசுவதை தடை சட்டம். இந்த பசுவதை தடை சட்டம் சுற்றியே சர்ச்சை எழுந்துள்ளது.
அமைச்சர் பேச்சு: சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ளவர் கே.வெங்கடேஷ். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி, "எருமை மாடுகளை வெட்டலாம் என்றால், பசுக்களை ஏன் வெட்டக்கூடாது.. அதில் என்ன தவறு?" என்று பேசியிருந்தார்.
கர்நாடக அமைச்சர் மேலும் பேசுகையில், "முந்தைய பாஜக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதில் எருமை மாடுகளை வெட்ட அனுமதித்திருந்தனர். ஆனால் பசுக்களை மட்டும் வதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர். அதுபற்றி விவாதித்து முடிவெடுப்போம்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
பாஜக எதிர்ப்பு: வயதான மாடுகளை வெட்ட அனுமதிப்பது கால்நடைகளை நிர்வகிப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உதவும் என்றும் அமைச்சர் வெங்கடேஷ் கூறியிருந்தார். இதைப் பேச்சைக் கடுமையாக விமர்சித்த பாஜகவினர், கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு எதிராகக் கர்நாடகாவில் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் வெங்கடேஷின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை, சித்தராமையா தனது அமைச்சருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், "இந்தியர்களான நாம் பசுவுடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு வைத்துள்ளோம். அவற்றைத் தாயாக வணங்குகிறோம்" என்றும் அவர் கூறியிருந்தார்.
அதேபோல கர்நாடக பாஜக எம்எல்ஏ அஸ்வத் நாராயண், "பசு வதை மசோதாவை ஏன் ரத்து செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் விளக்க மறுக்கிறது. இந்துக்களின் உணர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காங்கிரஸ் எடுக்கிறது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்கிறது" என்று அவர் சாடியிருந்தார். இதுபோல அம்மாநிலத்தில் உள்ள பல பாஜக தலைவர்களும் அமைச்சர் பேச்சை விமர்சித்திருந்தனர்.
முதல்வர் விளக்கம்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் சித்தாரமையா விளக்கமளித்துள்ளார். அதாவது, முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தில் தெளிவு இல்லை என்றும், அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் சித்தராமையா கூறினார். அதேநேரம் இந்த விவகாரத்தில் தற்போது வரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவாகக் கூறினார்.
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் பசு வதையைத் தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. கர்நாடகா வதை தடுப்புச் சட்டம் மற்றும் கால்நடைகளைப் பாதுகாத்தல் சட்டம் என்று அழைக்கப்பட்டும் இந்தச் சட்டத்தில் பசுக்களை மாநிலத்தில் வெட்டத் தடை விதிக்கப்பட்டது. 13 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளை மட்டுமே வெட்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications