"கர்நாடகாவின் கருணாநிதி.." சமூக நீதியை சாதித்து காட்டியவர்! திராவிட கொள்கையாளர் சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட அவர் யார்? அவரது பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்ற நிலையில், அங்கே முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
கர்நாடகா: இந்தச் சூழலில் தான் இப்போது கர்நாடக முதல்வராக சித்தராமையா அறிவிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இது குறித்து 4 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், இறுதி முடிவை எடுக்க முடியவில்லை. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டார். இதன் பின்னரே டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை விட்டுதர சம்மதித்துள்ளார்.
கட்சியின் நலனுக்காகத் தியாகம் செய்ய ஒப்புக்கொண்டதாக டிகே சிவக்குமார் கூறியதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர். மேலும், டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் தரவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், ஒரே துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கர்நாட முதல்வராக காங்கிரஸ் தலைமை டிக் அடித்துள்ள இந்த சித்தராமையா யார்? அவரது பலம், பலவீனம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கர்நாடகாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2013 முதல் 2018 முதல்வர் பதவியில் முழுமையாக இருந்த நபர் என்ற சிறப்பை பெற்றவர் சித்தராமையா. கர்நாடக முன்னாள் முதல்வரும் கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா, 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தவர். 75 வயதான சித்தராமையா, மைசூர் பல்கலைக்கழகத்தில் B.Sc பட்டம் பெற்றார். மேலும், அவர் சட்டப் படிப்பையும் முடித்துள்ளார்.
கலக்கல் வெற்றி: சித்தராமையா 1978ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சாமுண்டேஸ்வரி தொகுதியில் பாரதிய லோக்தளம் சார்பில் போட்டியிட்டார். 1983இல் நடந்த கர்நாடக தேர்தலில் களமிறங்கினார். தனது முதல் வாய்ப்பை அட்டகாசமாகப் பயன்படுத்திக் கொண்ட சித்தராமையா, தேர்தலில் தீவிரமாக வேலை செய்தார். அந்த தேர்தலில் அவர் கலக்கல் வெற்றியைப் பெற்றார்.
அவரது இந்த வெற்றி அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வெற்றி அவருக்குப் பழைய மைசூர் பகுதியில் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்த அவர், கன்னடத்தை அதிகாரப்பூர்வ மொழியாகச் செயல்படுத்தும் கன்னட கண்காணிப்புக் குழுவின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1985இல் நடந்த தேர்தலில், சித்தராமையா அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமைச்சர் பதவி: அப்போது ஜனதா கட்சி ஆட்சியை அமைத்த நிலையில், அவருக்குக் கால்நடைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர் பல துறைகளில் அப்போது அமைச்சராக இருந்தார். 1989இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் முதல்முறையாகக் காங்கிரஸ் மூத்த தலைவரான எம். ராஜசேகர மூர்த்தியால் தோற்கடிக்கப்பட்டார்.
1992இல், அவர் ஜனதா தளத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1994 சட்டசபைத் தேர்தலில் தேவகவுடா தலைமையிலான ஜனதா தள அரசில் நிதி அமைச்சரானார். பின்னர், 1996இல் ஜே.எச்.படேல் முதலமைச்சராக ஆனபோது, சித்தராமையா துணை முதலமைச்சராக ஆக்கப்பட்டார்.
நீக்கம்: ஜனதா தளம் பிளவுபட்ட நேரத்தில் அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் அணியில் சேர்ந்து அதன் மாநிலத் தலைவர் ஆனார். இருப்பினும், 1999 சட்டசபைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 2004 இல், தரம் சிங் முதல்வராக இந்தியத் தேசிய காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசை அமைத்தபோது, அவர் மீண்டும் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
2005ஆம் ஆண்டில் தேவகவுடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்தராமையா ஜே.டி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். குமாரசாமிக்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்லது குமாரசாமியின் முக்கியத்துவத்தை சித்தராமையா என்ற ஆளுமை விழுங்கிவிடும் என்பதற்காக தேவகவுடா சித்தராமையாவை பகைக்க துணிந்தார். எனவே ABPJD என்ற பிராந்தியக் கட்சியை உருவாக்க சித்தராமையா விரும்பினார். இருப்பினும், கர்நாடகாவில் எந்தவொரு மாநிலக் கட்சியும் சாதித்து இல்லை என்பதால் அவர் இதில் தயக்கம் காட்டினார்.
காங்கிரஸில் ஐக்கியம்: இதையடுத்து அவர் தனது பெருந்திரளான ஆதரவாளர்களுடன் சோனியா காந்தி முன்னிலையில் பெங்களூரில் காங்கிரஸில் இணைந்தார். 2006 டிசம்பரில் நடைபெற்ற சாமுண்டேஸ்வரி இடைத்தேர்தலில், தேவகவுடா, அப்போதைய முதல்வர் குமாரசாமி மற்றும் துணை முதல்வர் எடியூரப்பா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தையும் தாண்டி 257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத் தேர்தல் என்பது பெரும் இடர்பாடு என்பதை அப்போது உணர்ந்து கொண்டதாக இப்போது வரை சித்தராமையா சிரித்தபடி கூறிவருகிறார்.
இந்தச் சூழலில் தான் 2013 தேர்தலில் காங்கிரஸ் வென்ற போது, அவர் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக இருந்த சமயத்தில் கர்நாடகா - தமிழ்நாடு இடையிலான காவிரி நதிநீர் விவகாரம், காவிரியின் குறுக்கே அணை கட்டுவது, நீர் திறந்துவிடுவது போன்றவற்றில் பிடிவாதம் காட்டினார். திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி கொண்டாடியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து ஐந்து முறை வெற்றி பெற்ற அவர், மூன்று முறை தோல்வி அடைந்துள்ளார். அவர் 1989 மற்றும் 1999 சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். கடந்த 2018இல் சாமுண்டீஸ்வரி, பதாமி என இரு தொகுதியில் போட்டியிட்ட அவர், சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்தார். அதே நேரம் பாதாமி தொகுதியில் வென்றார். மேலும், அவர் 2008இல் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் விளம்பரக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
பலம் என்ன: காங்கிரஸில் இருக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவரான சித்தராமையாவுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியிலும் பெரிய ஆதரவு கொண்டவர். 2013 முதல் 2018 வரை முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த அனுபவமும் கொண்டவர். மேலும், அவர் இதுவரை கர்நாடக அரசின் 13 பட்ஜெட்களை சமர்ப்பித்த அனுபவமுள்ள தலைவர் ஆவர்.
கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் ஆகியோரின் நலனிற்காக அஹிண்டா இயக்கத்தையும் நடத்தினார். இது ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதியைப் பெற்றுத் தரும் அரசியல் அல்லாத சமூக இயக்கமாகும். காங்கிரஸில் 2006இல் இணையும் முன்பு வரை இந்த இயக்கம் மூலம் பல்வேறு பணிகளை அவரை செய்துள்ளார்.
மத சிறுபான்மையினர், தலித் மற்றும் ஆதிவாசிகள் மாநிலத்தின் மக்கள்தொகையில் 39% உள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் (14.79%), பட்டியல் சாதிகள் (17.14%) மற்றும் பழங்குடியினர் (6.95%) மற்றும் உள்ளனர். இந்த தேர்தலில் இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த வாக்குகளும் வெற்றிக்கு முக்கியமானது. இவர்கள் அனைவரும் நீண்ட காலமாக தங்கள் நலனிற்குக் குரல் கொடுத்த சித்தராமையா நம்பியே வாக்களித்துள்ளனர்.
மேலும், அவருக்கு ஆன்மீகத்தில் பெரியளவில் நாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. தான் அதிகாரத்தில் இருக்கும் போது அனைவருக்கும் சமூக நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இயங்கியவர். அதேநேரம் தன்னை சுற்றி இருப்பவர்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்களின் ஆன்மீக நடவடிக்கைகளில் தலையிட மாட்டார். சமூக நீதி, மொழி பற்றி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் நலனுக்காக அஹிந்தா என்ற அமைப்பை நடத்தியவர். எனவேதான் அவர்கள் ஓட்டுகள் சித்தராமையாவிற்காக காங்கிரசுக்கு கிடைத்து வருகின்றன. ஆட்சியில் இருந்தபோது இந்திரா கேண்டீன் திட்டம் கொண்டுவந்து ஏழைகள் பசிபோக்கினார். ஏழை பெண்கள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கினார். கடை நிலையில் உள்ளவர்களை நோக்கியே இவரது திட்டங்கள் இருந்தன. எனவேதான், சித்தராமையாவை செல்லமாக கர்நாடகாவின் கருணாநிதி என்று அழைக்கிறார்கள். சட்டசபை உரைகளில் பலமுறை அவர் திராவிட கொள்கையை உயர்த்தி பேசியுள்ளார். அறிஞர் அண்ணா, கருணாநிதி கொள்கைகளை புகழ்ந்துள்ளார்.
பலவீனம் என்ன: இவை எல்லாம் அவருக்கு பலம் என்றாலும் அவருக்கு சில பலவீனங்களும் இருக்கவே செய்கிறது. சித்தராமையாவுக்கு காங்கிரஸில் அமைப்பு ரீதியாகப் பெரியளவில் தொடர்பு இல்லை. 2018ஆம் ஆண்டு தனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வர அவரால் முடியவில்லை. ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வந்தவர் என்ற முத்திரையும் அவர் மீது இருக்கவே செய்கிறது. இருப்பினும், அதை எல்லாம் தாண்டி காங்கிரஸ் தலைமை இப்போது மீண்டும் அவருக்கு வாய்ப்பை கொடுக்க உள்ளது. மாநிலம் முழுக்க மக்கள் ஆதரவு கொண்டவர், ஊழல் இல்லாதவர் என்ற இரண்டு பெரிய விஷயங்கள் அவரை உச்சம் தொட வைத்துள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications