"அரசுக்கு தேவை அந்த 3%.. அவ்வளவுதான்.." தங்க நகை அடகு வைக்க புது விதிகள்.. கொந்தளித்த பிரபலம்
சென்னை: தங்க நகைக் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி பல்வேறு விதிகளை அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக நகைகளை அடகு வைக்க பில் வேண்டும் என்பது போல இருந்த விதிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் இந்த விவகாரத்தில் காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
நமது நாட்டில் எல்லா குடும்பங்களுமே தங்கத்தைத் தான் முதல் சேமிப்பாகக் கருதுவார்கள். இதனால் எப்படியாவது சிறுக சிறுக சேமித்தாவது தங்கத்தை வாங்கிவிடுவார்கள். கஷ்ட காலங்களில் இந்த தங்கத்தை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தில் மீண்டுவிடுவார்கள். பிறகு நிலைமை சீரானதும் மீண்டும் அந்த தங்கத்தை மீட்டுவிடுவார்கள்.

அதிர்ச்சி
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இதுபோலத் தான் கஷ்ட காலங்களில் தங்கத்தை வைத்துச் சமாளிக்கிறார்கள். இந்தச் சூழலில் தான் சமீபத்தில் ரிசர்வ் வங்கி தங்க நகைகளை அடகு வைப்பது குறித்து புதிய ரூல்ஸை வெளியிட்டிருந்தன. அதில் குறிப்பிடப்பட்ட சில விதிகள் பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருந்தது.
அதாவது இப்போது சில வங்கிகள் நகையின் மதிப்பிற்கு 80 சதவிகிதம் வரை கூட கடன் வழங்குகிறது. ஆனால், இனிமேல் 75% மதிப்பிற்கு மட்டுமே தங்க நகைக் கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் என்றால்.. உங்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடனாகக் கிடைக்கும்.
பில் வேண்டும்
அதேபோல தங்கம் தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தங்கத்தை முறையாகக் கடையில் வாங்கினோம் என்பதற்கான பில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நமது நாட்டில் அவ்வளவு சீக்கிரம் யாரும் தங்கத்தை விற்க மாட்டார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்கத்தை வைத்திருக்கவே பார்ப்பார்கள். அந்தளவுக்குத் தங்கம் என்பது நமது கலாச்சாரத்தில் முக்கிய இடம் இருக்கிறது. இதனால் பல குடும்பங்களில் தலைமுறைகளைக் கடந்தும் கூட தங்க நகைகளை வைத்திருப்பார்கள்.
பொருளாதார வல்லுநர்
ரிசர்வ் வங்கியின் இந்த விதிகளால் அப்படி தலைமுறைகளாக வீட்டில் இருக்கும் தங்கத்தை ஒருவரால் அடகு வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய தங்கத்திற்கு பில் உட்பட ஆவணங்கள் இருக்காது. இதனால் கஷ்ட காலத்தில் அதை அடகு வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ராஜேஷ் இந்த விவகாரத்தில் சில காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பில் இல்லாத நகைகளை அடகு வைக்க என்ன செய்ய வேண்டும்? 1. பெரிய நகைக் கடைக்குச் செல்லுங்கள். 2. பழைய நகைகளை உருக்கி valuation செய்யுங்கள். 3. GST 3%, செய்கூலி 10%, சேதாரம் 18% கட்டி புதிய நகைகளை வாங்குங்கள். 4. அந்த புதிய நகை மற்றும் பில்லை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்று அடகு வையுங்கள்.
தேவை அந்த 3% தான்
என்னது? இப்படி பண்ணினா நஷ்டம் வருமா? நீங்க எல்லாரும் எப்படி எனக்கென்ன? எனக்குத் தேவை, அந்த 3%. அவ்ளோதான்" என்பதே அரசின் எண்ணமாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். அதாவது தங்க நகைகளை விற்கும்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிக்காகவே இந்த விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications