ஒரே தேசம் ஒரே வரியெல்லாம் நடக்காத காரியம் - ஜெட்லி
நம் நாட்டைப் பொருத்தவரை ஒரே வரிவிகிதம் என்பது நடக்காத காரியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரே ஒரு ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது செயல்படுத்தமுடியாது என்றும், ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்களை மேற்கோள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி முறையானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து முஸ்தீபுகளும் பிஜெபி கட்சியானது ஆட்சிக்கு வந்தது முதேலே நடைபெற்று வந்தன.
அப்போதே வணிகர்களும் தொழில் துறையினரும் வாட் வரி முறை போல் இல்லாமல் ஒரே ஒரு வரி விகிதம் மட்டுமே கொண்டுவரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஒரே ஒரு வரிமுறை
மத்திய அரசு தரப்பிலும், எங்களின் நோக்கமே ‘ஒரே தேசம், ஒரே வரி முறை' என்ற கொள்கைதான். எனவே அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரே ஒரு வரி முறைதான் கொண்டுவரப்படும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசு தரப்பில் வகையில் பேசி வந்தனர்.

ஒரு ஜிஎஸ்டி வரி
ஆனால், அந்த நம்பிக்கைக்கு மாறாக ஜிஎஸ்டி வரி முறை சட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது நான்கு விதமான ஜிஎஸ்டி வரி முறையானது நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பின்னர் வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப பின்னர் படிப்படியாக ஒரே ஒரு ஜிஎஸ்டி வரி விகிதம் அமல்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்டில் உறுதியளித்தார்.

நிதி அமைச்சர் ஜெட்லி
நிதி அமைச்சர் ஜெட்லி சொன்னது போல் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கான வரி விதிங்கள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டனவே தவிர, ஒரே ஒரு வரி விகிதம் என்ற திட்டத்தைப் பற்றி எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. இதனால் வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஒரே வரி முறையாக மாற்றும் திட்டம்
வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் அதிருப்தியை உணர்ந்த நிதி அமைச்சர் ஜெட்லியும், அவர்களின் அதிருப்தியை போக்கும் விதத்தில், ஜிஎஸ்டி வரிமுறையில் சீர்திருத்தம் செய்யப்போவதாகவும், நான்கு விதமான வரிமுறையை ஒரே வரி முறையாக மாற்றும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த ஆலோசனைகளை சட்ட வல்லுநர்களிடம் கேட்டுள்ளதாகவும், அந்த ஆலோசனைகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்பதல் பெறப்பட்ட பின்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மாற்றி பேசும் ஜெட்லி
நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பை கேட்டு வர்த்தகர்களும், தொழில் துறையினரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் மகிழ்ச்சியை நிதி அமைச்சர் ஜெட்லி நெடுநாட்கள் நீடிக்க விடவில்லை. நம் நாட்டைப் பொருத்தவரை ஒரே வரிவிகிதம் என்பது நடக்காத காரியம் என்று தற்போது தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு முடியாது
கடந்த செவ்வாய்யன்று டெல்லியில் நடைபெற்ற இந்தியா கொரிய வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் அவர் தெரிவிக்கையில், நம்முடைய நாட்டில் அதிக அளவில் ஏற்றத் தாழ்வுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்ற தற்போதைய சூழலில் இப்போதைக்கு ஒரே ஜிஎஸ்டி வரி முறை என்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று தெரிவித்தார்.

நீண்ட கால அவகாசம்
ஜிஎஸ்டி வரிமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பு, வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் ஒரே மனதாக ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு இணக்கமான சூழுல் ஏற்பட்டு ஜிஎஸ்டி வரிவசூலில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் இருக்கும். உதாரணமாக, இரண்டு விதமான வரி விதிப்பு முறையை ஒன்றாக இணைக்க முற்படும்போது இணைப்பதற்கான சாதகமான சூழல் ஏற்படுவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதுவரையிலும் நாம் சற்று காத்திருக்கவேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications