டிரம்பை பார்த்து பயப்படும் உலகம்.. நாம் என்ன செய்யணும்? உலக அரசியலை ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: அமெரிக்க அதிபரான டிரம்ப் ஒவ்வொரு நாடுகள் மீதும் வரியை விதித்து வருகிறார். இது வர்த்தக போர் என்றும் இதனால் சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பலரும் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே டிரம்பால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பிரச்சினை வரும் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரியைப் போட்டுவிட்டார். அடுத்த கட்டமாக ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோகல் வரியை அறிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா மீது ஒரு நாடு எவ்வளவு வரியைப் போடுகிறதோ.. அதே அளவுக்கு வரியை அமெரிக்காவும் போடும் என்பதே இந்த ரெசிப்ரோகல் வரியாகும். இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஆனந்த் சீனிவாசன்
இதற்கிடையே டிரம்பின் நடவடிக்கைகள் உலக அரசியலை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்து விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது இந்தியாவுக்கு என்ன மாதிரியான சிக்கலை உருவாக்கும் என்பது குறித்தும் நாம் எப்படி இதைக் கையாள வேண்டும் என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு டிரம்ப் என்பது ஒரு காரணம் தான். உண்மையில் டிரம்பிற்கு முன்பே நமது பங்குச்சந்தை அதிகமாகவே இருந்தது. டிரம்ப் ஒரு கேட்டலிஸ்ட் போல அமைந்துவிட்டார் என்றே சொல்லலாம். அமெரிக்காவுக்கு நாம் ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள், மருந்துகள், நகைகள், லெதர், ஜவளி ஆகியவற்றை அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்காவின் வரியால் இந்த துறைகள் எல்லாம் அடி வாங்கும்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
என்னைப் பார்த்து இந்தியா பயந்து.. பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருக்கிறார். இந்தியா டிரம்பை சரியாகக் கையாளவில்லை என்றே நினைக்கிறேன். வம்பு இழுக்கும் ஒருவரைக் கண்டு பயப்படக்கூடாது.. பதிலுக்குத் திரும்ப முறைக்கவே வேண்டும். நாம் அஞ்ச தொடங்கினால் நம்மை மிரட்டுவது அதிகரிக்கவே செய்யும். பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா என அனைத்து நாடுகளும் டிரம்பிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதிலும் சீனா வர்த்தக போருக்குக் கூட தயார் என சொல்லிவிட்டது.
நாமும் இதுபோல சரியான பதிலடி தந்திருக்க வேண்டும். ஆனால், எதற்கு வரி குறைக்கலாம் எனப் பேச தொடங்கிவிட்டார்கள். நீங்கள் இப்படிப் போனால் தொடர்ந்து குத்திக்கொண்டு தான் இருப்பார்கள். வேண்டும் என்றால் வர்த்தகம் செய்யலாம்.. இல்லையென்றால் வரியைப் போட்டுவிட்டு போ எனச் சொல்லிவிட வேண்டும்.
எப்படி பாதிப்பு ஏற்படும்?
ஏனென்றால் நீங்கள் டெஸ்லாவுக்காக வரியைக் குறைத்தால்.. அவர்கள் சீனாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தான் காரை இறங்குவார்கள். இதனால் நமது உள்ளூர் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். நமது நாட்டில் இப்போது டாடா மற்றும் மஹிந்திரா என இரு நிறுவனங்கள் மட்டுமே சொந்த தொழில்நுட்பத்துடன் கார்களை செய்கிறார்கள். அவர்களைப் புறக்கணித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தால் உள்ளூர் நிறுவனங்களுக்குப் பெரிய சிக்கலாகிவிடும். டிவிஎஸ், ஹீரோ, பஜாக் ஆகிய டூவீலர்களும் நமது நாட்டின் நிறுவனங்கள் தான்.
உள்நாட்டு நிறுவனங்களுக்கு சிக்கல்
நாம் இத்தனை காலம் மிகவும் கஷ்டப்பட்டு இதுபோன்ற உள்ளூரில் ஆட்டோமொபைல் நிறுவனங்களை உருவாக்கியுள்ளோம். யாரோ ஒருவருக்குப் பயந்து வெளிநாட்டு நிறுவனங்களை விட்டால், நமது நாட்டு கம்பெனிகள் தான் அடிவாங்கும். மருந்துகளை உற்பத்தி செய்யும் பார்மா துறையிலும் இதே சிக்கல். உலகின் ஜெனரிக் மருந்துகளின் தலைநகராக இந்தியா இருக்கிறது. அதற்கும் சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது.
எப்படிக் கையாள வேண்டும்?
எனவே, வம்பு இழுக்கும் நபரைப் பார்த்துப் பயப்படக்கூடாது. அமெரிக்காவில் ஒருவரால் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அப்படி பார்த்தால் இன்னும் டிரம்பிற்கு 4 ஆண்டுகள் தான் இருக்கிறது. எனவே, அவருக்கு பயந்து வரியைக் குறைக்கக்கூடாது. அப்படி செய்தால் உள்ளூர் தொழில்நுட்பமே இல்லாமல் போய்விடும். எனவே, இதை நாம் கவனமாகவே கையாள வேண்டும்.












Click it and Unblock the Notifications