ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 93,960 கோடியாக சரிவு - 67 லட்சம் ரிட்டன் தாக்கல்
ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி 93,960 கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட குறைவாகும். ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 96,483 கோடியாக இருந்தது.
சென்னை: ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை 67 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். முந்தைய மாதம் இது 66 லட்சமாக இருந்தது. ஜூலை 21ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. இது ஜூலை 27ம் தேதியில் இருந்து அமலானது.

வரி குறைக்கப்பட்ட பொருட்களின் விற்பனை சில நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டதால் வரி வசூல் குறைந்திருக்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, கேரளாவில் பலர் கணக்கு தாக்கல் செய்யவில்லை. அங்கு ஜூலை மாதத்துக்கான கணக்கு தாக்கல் செய்ய கெடு தேதி, வெள்ள பாதிப்பு காரணமாக அக்டோர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 67 லட்சமாகும். ஜூன் முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலத்திலோ 66 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் சராசரியாக 89,895 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்ச அளவாக ரூ.1,03,459 கோடியாக இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்துள்ளது. இது 2018-19 ஆம் நிதியாண்டில் குறைவான வரி வசூல் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications