பறக்குது தங்கம் விலை.. அலை அலையாக அணிவகுக்கும் காரணங்கள்.. இன்னும் எவ்வளவு உயரும்! 5 பாயிண்டுகள்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் புதிய உச்சத்திற்குப் பறந்து கொண்டு இருக்கிறது. இந்த ரேஞ்சில் போனால் மிக விரைவில் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தங்கம் விலை இந்தளவுக்கு உச்சம் தொட என்ன காரணம்.. இது வரும் காலத்தில் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து 5 பாயிண்டுகள் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை இப்படித் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

தங்கம் விலை உயர்வு
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு கிட்டதட்ட ரூ.600க்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8290 என்று விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு மளமளவென உயர்ந்து தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.8945ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இப்படி படுவேகமாக கேப் விடாமல் உயரப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. தங்கம் விலை இப்படித் தாறுமாறாக உயர்வதற்கான காரணம்.. மேலும், வரும் காலத்தில் இது எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் 5 பாயிண்டுகளாக பார்க்கலாம்.
1. பலவீனமான டாலர்
முதலில் அமெரிக்க டாலர் பலவீனமாகி வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு 0.5% சரிந்துள்ளது. இதனால் மற்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர். அதாவது எப்போதும் சர்வதேச வர்த்தகத்தில் டாலர் கொடுத்தே தங்கத்தை வாங்க வேண்டும். இதனால் டாலர் மதிப்பு சரியும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறைந்த பணத்தைச் செலவு செய்தாலே தங்கத்தை வாங்கலாம். அதுவே முக்கிய காரணம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்போதும் டாலர் மதிப்பு குறையும்போது தங்கம் விலை உயரும்
2. சர்வதேச பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் குழப்பம்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போரால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளர்களை மேலும் கவனமாக இருக்க வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற காலங்களில் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதுவார்கள். அதுவே இப்போதும் நடந்துள்ளது.
இது தொடர்பாக ஆக்மாண்டின் ரிசரச்ச் தலைவர் ரெனிஷா சைனானி கூறுகையில், "தங்கத்தின் விலை இப்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.. டாலர் மதிப்பு குறைவது, வர்த்தகப் போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி உள்ளிட்டவையே இதற்குப் பிரதானக் காரணம். இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைக் கருதுகிறார்கள்" என்றார்.

டிரம்ப் ஆட்டம்
டிரம்ப் உலகின் மற்ற நாடுகள் மீதான வரியை நிறுத்தி வைத்தாலும் கூட சீனா மீதான வரிகளை அதிகரித்துள்ளார். அதிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் அவர் கனிம இறக்குமதிகள் மீது வரி விதிக்க முடியுமா என்பது குறித்து ஆராய உத்தரவிட்டிருந்தார். சர்வதேச வரி விதிப்பில் இருந்து டிரம்ப் பின்வாங்கப்போவது இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும், கனி இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டால் இதனால் சீனாவே அதிகம் பாதிக்கப்படும்.
ஒட்டுமொத்தமாகச் சீன இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245%ஆக உயர்த்தியுள்ளது. என்ன தான் சீனாவை எதிர்த்தாலும் கூட பல பொருட்களை அமெரிக்கா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்கா இப்படி வரி மீது வரி விதிப்பது வணிகப் பதற்றத்தை அதிகரித்தே இருக்கிறது.
3. சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதுவும் ஒரு பிரதானக் காரணம். இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேச சந்தையில் 3,300 டாலரை தாண்டிவிட்டது. கோல்ட் ப்யூச்சர்ஸும் இதை விட அதிகமாகவே இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அதுவே இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

4. அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ETFகளில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதனால் இடிஎஃப்களும் தங்கத்தை வாங்கும் நிலையில், விலை உயர்கிறது. இது மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தைத் தொடர்ந்து குவித்து வருகின்றன. இதனால் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு சப்ளை இருப்பதில்லை.
இது தொடர்பாக கோடக் செக்யூரிட்டிஸின் துணைத் தலைவர் கெய்னாட் செயின்வாலா கூறுகையில், "சர்வதேச முதலீடு தங்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீன தங்க ETFகளில் முதலீடு அதிகரித்துள்ளது. அங்கு ஏப்ரல் மாதத்தின் முதல் 11 நாட்களில் மட்டும் 29.1 மெட்ரிக் டன்கள் வரை தங்க முதலீடு அதிகரித்தாக உலக வர்த்தக அமைப்பு கூறுகிறது. இது முதல் காலாண்டில் மொத்த முதலீட்டை ஏற்கனவே தாண்டிவிட்டது. அமெரிக்கத் தங்க இடிஎஃப்களை காட்டிலும் சீன இடிஎப்கள் வேகமாக வளர்ந்து வருகிறது" என்றார்.
5. சர்வதேச வணிக நிறுவனங்களின் கணிப்பு
உலகில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்கள் பலரும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்றே கணித்துள்ளன. சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் தேவை அதிகரிப்பதன் காரணமாகத் தங்கம் விலை அதிகரிக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அடுத்தாண்டு நடுப்பகுதிக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $4,000ஐ எட்டும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரம் வரை செல்லலாம் என கணித்துள்ளனர்
இது தொடர்பாக ஆக்மாண்டின் நிதி நிறுவனம் கூறுகையில், "மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. புவிசார் அரசியல் சூழல், விநியோகச் சங்கிலி சிக்கல், பணவீக்கம் குறித்த அச்சம், மாறி வரும் வரி விகிதம் ஆகியவை காரணமாகத் தங்கம் விலை வரும் காலத்திலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிகிறது. ஜூன் மாதத்திற்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் ஒப்பந்தம் ஏற்கனவே புதிய உச்சம் தொட்டுள்ளது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications