112 இந்தியர்கள் நாடு கடத்தல்.. பஞ்சாபில் இரவில் தரையிறங்கிய 3வது அமெரிக்க போர் விமானம்!
சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடு கடத்தி வந்த 3 வது போர் விமானம் இன்று இரவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டோரின் எண்ணிக்கை என்பது 332 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்த நாடு வெளியேற்றி வருகிறார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இந்தியர்களும் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதனால் இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி 2 அமெரிக்க போர் விமானங்களில் இந்தியர்கள் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் தேதி முதற்கட்டமாக அமெரிக்க போர் விமானத்தில் 104 இந்தியர்கள் அமிர்தசரஸில் வந்து இறங்கினர். அதன்பிறகு நேற்று 114 இந்தியர்கள் 2வது கட்டமாக அமெரிக்க போர் விமானத்தில் அமிர்தசரஸ் வந்தனர். இவர்கள் ராணுவ விமானத்தில் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து இன்று 3வது போர் விமானம் இந்தியர்களுடன் புறப்பட்டது. இந்த விமானம் இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவில் அமெரிக்காவின் போர் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இரவு 10.03 மணிக்கு இந்த விமானம் தரையிறங்கியது.
இந்த போர் விமானத்தில் மொத்தம் 112 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 31 பேர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 2 பேர், உத்தர காண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த லா ஒருவர் என்று மொத்தம் 112 பேர் உள்ளனர்.
தற்போது வரை மொத்தம் 3 முறையாக மொத்தம் 332 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இனி அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதேபோல் அமெரிக்காவின் போர் விமானங்களில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications