1.27 லட்சம் பெண்கள் நீக்கம்? மகளிர் உரிமைத் திட்டத்தில் மோசடியா? பதில் தருமா அரசு?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகளாக இருந்துவந்த 1.27 லட்சம் பெண்கள் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அரசின் செயல்பாட்டில் ஏன் இவ்வளவு குளறுபடிகள் நிலவுகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் எனக் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதை நடைமுறைப் படுத்துவதை திமுக அரசு தாமதித்து வந்தது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்த போது, அப்போது நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் ராஜன், 'தனிநபர் வருமானம் சார்ந்த முறையான தரவுகள் இல்லை. ஆகவே பயனாளர்களைக் கண்டறிவது தொடர்பாக ஆய்வுகள் நடந்துவருகின்றன” என்று விளக்கம் அளித்திருந்தார்.

அதாவது 1.63 கோடி விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் அந்த விண்ணப்பதாரர்களில் 1.06 கோடி பேர் தகுதியானவர்கள் என அரசு முடிவு செய்து அறிவித்தது. அதற்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்தினை காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அவர் தொடங்கி வைத்தார்.
“திமுக இதனை ஒரு திட்டமாக முன்வைத்த போது எதிர்க்கட்சிகள் அதனைச் செயல்படுத்த முடியாத ஒன்றை திமுக சொல்கிறது என்றும் இது பொய்யான வாக்குறுதி என்றும் தெரிவித்தன. ஆனால், அதை முறியடித்து திமுக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது” என்று கடந்த 2023 நவம்பர் 10 அன்று விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக 40க்கும் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு இந்த மகளிர் உரிமைத் திட்டம் முழுக் காரணம் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்திருந்தன. சொல்லப் போனால் அதிமுக அளவுக்குப் பெண்களின் வாக்குகள் திமுக பக்கம் எப்போதும் இருந்தது இல்லை. அதை மனதில் வைத்தே பெண்களைக் கவரும் ஒரு திட்டமாக இதனை முன்வைத்தது திமுக.
ஆனால், அந்தக் கருத்தை மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஏற்க மறுத்தார். பெண்கள் முன்னேற்றம் சார்ந்த உருவான திட்டம் என்று இதனைக் குறிப்பிட்டார். இன்றைக்குக் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இதைப் பின்பற்றியுள்ளன. எனவே இது அப்பட்டமான வாக்கு அரசியல்தான் என வட இந்தியாவில் உள்ள சில ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
ஆனால், இதற்கு முன்பாக திமுக ஆட்சியில் மு.கருணாநிதி பெண்களுக்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். அதாவது திருமண உதவித் திட்டம். அதற்கு ஒரு பெண் எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என விதியை வகுத்தார். அது பெண் கல்வி முன்னேற்றத்தின் ஒரு அடிப்படையாக வகுக்கப்பட்டு செயல்வடிவம் பெற்றது. ஆனால், குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் திட்டத்தில் அப்படி எந்தப் பெண் முன்னேற்றமும் பின்புலமாக இல்லை. குடும்ப வருமானம் 2.5 லட்சம் என்பது மட்டுமே விதியாகச் சேர்க்கப்பட்டது.
இதில் கல்வியை அடிப்படையாகவோ வேறு பெண் முன்னேற்றமோ விதியாக அமைக்கப்படவில்லை. விண்ணப்பித்தவர்களின் தரவுகளைச் சரியாகக் கண்டறிந்த பிறகே அவர்களுக்கு அரசு இந்த உரிமைத் தொகையை வழங்கியது. ஒருவர் விண்ணப்பித்தால் அவரது வருமான வரம்பு, குடும்ப நிலை என்பதைத் தானாகக் கண்டறியும்படி ஆதார் எண் இணைக்கப்பட்டும் இருந்தது.
அப்படி அனைத்து விதமான சோதனைகள் செய்யப்பட்டும் இதில் பல குளறுபடிகள் நடந்தன. முதலில் வங்கிக் கணக்கில் போட்ட பணத்தை வங்கியில் முறையான இருப்பு வைக்கவில்லை என வங்கி நிர்வாகமே பிடித்தம் செய்தது. அது குறித்து சர்ச்சை வந்த போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முன்பே வங்கிகளுக்கு அது குறித்து அறிவிப்பாணை வழங்கப்பட்டுள்ளது” என்றார். ஆனால், இதுவரை வங்கிகள் பிடித்தம் செய்த தொகை எத்தனைப் பேருக்கு மீண்டும் வரவு வைக்கப்பட்டது என்பதற்கான வெளிப்படையான தரவுகளை அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில்தான் இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களில் அரசு ஊழியர்கள், நிலம் வைத்திருப்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தைவிடக் கூடுதலாக ஈட்டியவர்கள், இறந்து போனவர்கள் என 1.27 லட்சம் பெண்களைக் கண்டறிந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து நீக்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
இந்தத் தகவலை அரசு வெளியிடவில்லை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. பெறப்பட்ட அதிகாரப்பூர்வ அக்டோபர் 31 வரையான தரவுகளின்படி, முன்பு 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியாகப் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அறிய முடிகிறது. அப்படி என்றால் இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இவர்கள் பற்றிய தரவுகள் சரி பார்க்காதது ஏன்? இறந்து போன பெண்களை தவிர்த்து அந்த போர்ட்டல் எப்படி இவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யாமலே எப்படி உரிமைத் தொகையை வழங்க ஒப்புதல் அளித்தனர்.

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் இறப்புச் சான்றிதழ் தரவுகளின்படி 2022ஆம் ஆண்டிலிருந்து சராசரியாக ஒரு மாதத்திற்கு 58,000 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளன. அப்படி எனில் உரிமைத் தொகை பெற்றுவந்தவர்களில் எத்தனைப் பேர் இறந்துள்ளனர்? அவர்கள் இறந்த பிறகும் பணப்பட்டுவாடா நடந்ததா? அப்படி எனில் எத்தனை மாதங்கள் நடந்தன? இதைப் பற்றி அரசு என்ன சொல்கிறது? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து ஒருவர் பயன்பெற அரசு வழிகாட்டுதல்களின்படி, பயனாளிகளின் ஐந்து ஏக்கர் வரை விளைநிலம் வைத்திருக்கலாம். மானாவாரி எனில் 10 ஏக்கர் நிலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அத்துடன் கார்கள், டிராக்டர்கள் போன்ற வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இதில் பலன் பெற தகுதியற்றவர்கள். இத்தனை விதிமுறைகளைக் கடந்து 1.27 லட்சம் பெண்கள் எப்படி பயனாளியாக இணைக்கப்பட்டனர்? அதற்கு அரசின் பதில் என்ன?












Click it and Unblock the Notifications