"சட்டசபையில் இந்த கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம்.. காயம்படாது”.. தமிழிசை கொடுத்த ஐடியா
சென்னை: தமிழக சட்டமன்றத்தில், தண்ணீர் பாட்டில் வைப்பது தொடர்பாக இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து விவாதம் ஏற்பட்ட நிலையில், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார்.
சட்டசபையில் இன்று பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டம்ளரில் குடிநீர் வைக்கப்படுகிறது. அதனை பணியாளர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கும் அடிக்கடி கொண்டு வந்து தருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, டம்ப்ளருக்கு பதிலாகத் தண்ணீர் பாட்டிகள் வைக்க வேண்டும். நெகிழியைப் பயன்படுத்தக் கூடாது என்பதால் கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

அப்போது குறுக்கிட்ட சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார். சட்டமன்ற விவாதத்தின் போது, ஆத்திரத்தில் உறுப்பினர்கள் யார் மீதேனும் அந்த கண்ணாடி பாட்டிலைக் கொண்டு தாக்கக்கூடும் என்று தெரிவித்தார். ஓபிஎஸ் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா விஜயகாந்த் வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன். நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான் தெலுங்கானா ஆளுநர் ஆனவுடன் தெலுங்கானா ராஜ்பவன் முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக. Plastic free rajbhavan ஆக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாற்றினேன். அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி, வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம்.
அந்தக் கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன். சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம். சிறிய குப்பிகள் தான் அதனால் வீசினாலும் காயப்படாமல் இருக்கின்ற அளவிலேயே இவை இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications