புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.. இனி புது ஷேப்பில் 10, 20 ரூபாய்! ஆர்பிஐ வெளியிட்ட அதிரடி டெண்டர்
சென்னை: நம்முடைய பர்சில் உள்ள 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இனி புது ஷேப்பில் மாறப்போகின்றன. ஆமாம்... எளிதில் கிழிந்து போகும் இப்போதுள்ள காகித நோட்டுகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் தாள்களால் ஆன ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கான உலகளாவிய டெண்டர் அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
பொதுமக்கள் தினந்தோறும், காய்கறி கடை முதல் பஸ்ஸில் பயணம் வரை அதிகமாக பயன்படுத்துவது 10, 20 ரூபாய் நோட்டுகளைத்தான். அதனால்தான், இந்த நோட்டுகள் மிக சீக்கிரமாகவே அழுக்காகி விடுகின்ளன.. சீக்கிரமாக கிழிந்தும் விடுகின்றன.

20, 10 ரூபாய் நோட்டுகள்
இப்படி கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை அச்சடிக்க அரசுக்கு ஆண்டுதோறும் 4875 கோடி ரூபாய் வரை செலவாகிறதாம். அதுமட்டுமல்ல, காகித நோட்டுகளை போலவே கள்ள நோட்டுகளை தயாரிப்பதும் இப்போதெல்லாம் மார்க்கெட்டில் அதிகமாகி விட்டது.. கடந்த ஒரு வருஷத்தில் மட்டும் 2.3 லட்சம் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
எதுக்காக புதிய பிளாஸ்டிக் நோட்டு
ஆனால் புதிதாக வரவிருக்கும் பிளாஸ்டிக் நோட்டுகளை அப்படியில்லை.. அவ்வளவு சீக்கிரம் எளிதில் யாராலும் போலியாக அச்சடிக்க முடியாது. தண்ணீரில் நனைந்தாலும் இது கிழியாது. காகித நோட்டை விட 6 மடங்கு அதிக காலம் உழைக்கும் என்பதால், அரசின் அச்சடிப்பு செலவும் மிச்சமாகும்.
அதனால்தான் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள சர்வதேச நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக குறிக்கப்பட்டுள்ளது.. 20, 10 ரூபாய்களைதான் அதிகமாக எல்லாருமே பயன்படுத்தி டேமேஜ் ஆவதால், முதற்கட்டமாக இவைகளை பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றி சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாணய தயாரிப்பு ரகசியங்களைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த டெண்டரில் ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்கும் பணியில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நிறுவனங்களோ, அங்குள்ள மூலப்பொருட்களோ அல்லது அந்த நாடுகளை சேர்ந்த ஊழியர்களோ எந்த காரணத்தைக் கொண்டும் சம்பந்தப்படக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவாக சொல்லியிருக்கிறது.
பழைய நோட்டுகள் செல்லுமா?
புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தாலும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இப்போது உங்களிடம் இருக்கும் பழைய காகித 10, 20 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடாது. கடைகளில் பழைய காகித நோட்டுகளும், புதிய பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாக செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கான சோதனை முயற்சி முழு வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளையும் பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் தாள்களுக்கு மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய நாணய சந்தை முழுவதும் கள்ளநோட்டுகளே இல்லாத பாதுகாப்பான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 50 நாடுகளில் இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications