முதல்வர் விஜய் மாணவர்களுக்காக விரைவில் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு.. அமைச்சர் பேட்டி
சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் பிணை தொடர்பாகத் தீர்வு காண்பதற்குத் தமிழ்நாடு முதல்வர் விஜய் விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார். "மாணவ, மாணவிகள் எல்லோரும் உயர்கல்வித்துறையின் பிரதிநிதிகள்; இருமொழிக் கொள்கையிலிருந்து நாம் என்றும் மாறமாட்டோம்" என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா, அவரது பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

மேடையில் அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், "எத்திராஜ் கல்லூரியில் இடம் கிடைப்பது மிகவும் அரிது. 1996-இல் எனது துணைவியார் இந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். எங்களுக்கு எந்தப் பதவி கிடைத்தாலும் எத்திராஜ் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். அந்தத் தொடக்கக் காலகட்டத்தில் இந்தக் கல்லூரியைப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக, பாரம்பரியமிக்கதாக இருக்கும். எப்போது என்னை இந்தக் கல்லூரிக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
இந்தக் கல்லூரியில் பேசுவதற்கான வாய்ப்பு, நான் உயர்கல்வித்துறை அமைச்சரான பிறகுதான் எனக்குக் கிடைத்துள்ளது. சாதாரணமான என்னைத் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக்கிய முதலமைச்சர் விஜய் சாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். கல்வி மட்டும் இருந்தால் போதாது, கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பும் இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த அரசு அதில் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதேபோல், முதல்வர் போதை ஒழிப்புத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து முழுமையாகப் போதைப் புழக்கத்தை அகற்ற வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் போதைப் புழக்கம் இருக்கக் கூடாது என்பதற்குத்தான் 'சிங்கப்பெண்' சிறப்புப் படை உருவாக்கப்பட்டது.
எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷாவின் மரணத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் (பெண்களைக் கேலி செய்தல் மற்றும் தொல்லை செய்தல்) குற்றத்தைத் தடுப்பதற்காக 1998-ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் 'தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டம்' என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார். 1998 ஜூலையில் நடைபெற்ற அந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை உறுதிசெய்யும் வகையில் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
தற்போதைய இந்த அரசாங்கமும் மிக விரிவான திட்டங்களைத் தயாரித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறது. சீனா போன்ற மேலை நாடுகளில் ஒரு காலத்தில் போதைப்பழக்கம் அதிகமாக இருந்தது. அந்தப் பழங்காலக் கட்டத்தில் உலக நாடுகளுக்குச் சீனா போன்ற நாடுகளிலிருந்துதான் அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன. 'கோனி டாங்' என்ற ஒருவர்தான் அந்தப் போதைக் கலாசாரத்தை அங்கு ஒழித்தார். அதேபோலத் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போது அதைச் செய்து காட்டி வருகிறார்.
'சிங்கப்பெண் படை' என்றதும் எனக்கு வீரமங்கை வேலுநாச்சியார்தான் ஞாபகம் வருகிறார். சிங்கப்பெண் படைகள் வேலுநாச்சியாரின் நினைவாகவும், அவருக்குச் செய்யும் போற்றுதலாகவும் இருக்க வேண்டும். கடந்த மாதம் நான் ஒரு விமானத்தில் பயணம் செய்தேன். அதில் இரண்டு பேருமே பெண் விமானிகள். விமானம் தரையிறங்கும்போது சற்றுத் தடுமாறியது. அப்போது பெண் விமானி சமயோசிதமாக எடுத்த துணிச்சலான முடிவால் அத்தனை பயணிகளும் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டார்கள். எங்களைக் காப்பாற்றியது ஒரு பெண் விமானிதான்.
மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு 1 லட்சத்து 2 ஆயிரம் நபர்களுக்குக் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு 4 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாத கடன் வழங்கப்பட்டது. அதற்கு மேல் 7 லட்சம் ரூபாய் வரை பெற்றோர் கையெழுத்து வாங்கி, அதன் பிறகே கடன் கொடுத்தார்கள். இந்த பிணை விவகாரம் தொடர்பாக நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, இது குறித்த மிகப்பெரிய அறிவிப்பைக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் விரைவில் அறிவிக்கவிருக்கிறார். நீங்கள் எல்லோரும் உயர்கல்வித்துறையின் பிரதிநிதிகள், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் அலுவலகத்திற்கு வரலாம். இருமொழிக் கொள்கையிலிருந்து நாம் என்றும் மாறமாட்டோம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், "மாணவர் கல்விக்கடன் என்பதைப் பற்றி நேற்று பத்திரிகையாளர்களை நான் சந்தித்தேன். கடந்த காலங்களில், அதாவது 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் மாணவர்களுக்குத் தாராளமாக வங்கிகளில் கல்விக்கடன் கிடைத்தது. அனைத்துப் படிப்புகளுக்கும் கடன் கிடைத்தது. எல்லோருக்குமான கல்விக்கடனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு 1 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்களுக்குக் கிடைத்த கல்விக்கடனை, இந்த நடப்பு கல்வியாண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற உன்னத முடிவை எடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு 2,600 கோடி ரூபாய் கடனாகக் கிடைத்தது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு 3,000 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் வரை மாணவர்களுக்கு நேரடியாகக் கடன் வழங்கப்பட்டது. 7 லட்சம் ரூபாய் வரை தாயோ தந்தையோ கூட்டு விண்ணப்பதாரராகக் கையெழுத்திட்டால் கடன் வழங்கப்படும். வங்கி மேலாளர்கள் இதில் மிகச் சரியான நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்பதை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
முதலமைச்சர் இதற்காக ஒரு விரிவான திட்டத்தை வகுத்திருக்கிறார். 7 லட்சம் ரூபாய் வரை உள்ள கடனுக்கான வரம்பு நீட்டிக்கப்படும். எவ்வளவு ரூபாய் வரை முழுமையாகப் பிணையில்லாத கடன் வழங்கப்படும் என்பதை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். தகுதியுள்ள எந்த ஒரு மாணவருக்கும் படிப்பதற்கான தடை இருக்கக் கூடாது. அதற்கு மாநில அரசு முழுப் பொறுப்பேற்று வங்கிகளை முறைப்படுத்தும். இதற்காக ஒவ்வொரு வங்கிக்கும் மாவட்ட அளவில் இருக்கக்கூடிய ஒரு நோடல் அதிகாரியும் , ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றுவார்கள். மேலும், 90-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியிருக்கிறது; அதுவும் விரைவில் சரிசெய்யப்படும்" என்றார்.














Click it and Unblock the Notifications