ரூ.600 கோடி இடிக்குதே! வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்.. நீதிமன்றத்தில் விஜய் வைத்த வாதம்
சென்னை: பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பு வைத்த வாதங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய்யிடம் தோல்வியடைந்த திமுக வேட்பாளர்கள் ஆர்.டி.சேகர் மற்றும் அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்களான எஸ்.தினேஷ் மற்றும் டி.என்.லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார்.

பிரமாணப்பத்திரத்தில் குளறுபடி?
தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் முதலமைச்சர் விஜய் தனது சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளார் என்றும், தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தினார் என்றும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
வழக்கை தள்ளுபடி செய்யுங்க
ஆனால், இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பு வாதங்களை மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் முன்வைத்தார்.
அதாவது வேட்புமனுத் தாக்கலின்போது சமரப்பிக்கப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களையோ அல்லது பொறுப்புகளையோ முதலமைச்சர் விஜய் முறையாக தெரிவிக்காமல் மறைத்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க ஆதாரமற்றவை மற்றும் கற்பனையானவை என்று வாதம் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆதாரமே இல்லை
1999ம் ஆண்டின் 170வது சட்ட ஆணைய அறிக்கை முதல் இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய முக்கிய தீர்ப்புகளின் பரிணாம வளர்ச்சியை விஜய் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அதனடிப்படையில் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டப்படி அனைத்து விவரங்களும் சரியான முறையிலேயே பிரமாணப்பத்திரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே நீதிமன்றம் ஆரம்பகட்டத்திலேய இந்த வழக்கை நிராகரித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ரூ.600 கோடி சொத்து இடிக்குதே!
இந்த வழக்கின் மையப்புள்ளி ரூ.600 கோடி சொத்தை சரியாக கணக்கு காட்டவில்லை என்பதுதான். அதாவது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.625 கோடி அளவுக்கு தனக்கும் தனது மனைவிக்கும் சொத்து இருப்பதாக விஜய் கூறியிருந்தார். ஆனால், பிரமாணப் பத்திரத்தில் இந்த சொத்து மதிப்புகள் மற்றும் வருமான வரி விவரங்கள் முழுமையாக காட்டப்படவில்லை என்றும் குறிப்பாக இரு வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த பத்திரத்தில் சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த குற்றச்சாட்டுகளை விஜய் தரப்பு மறுத்துள்ளது. ரூ.600 கோடிக்கு சரியாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது என்று விஜய் தரப்பு கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
