எமனாக மாறிய குடிநீர்? சென்னையில் 11 வயது சிறுவன் பலி! கழிவுநீர் கலந்து வந்ததை குடித்ததால் பலியா?
சென்னை: சென்னையில் 11 வயது சிறுவன் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், குடிநீரில் கழிவு நேர் கலந்து வந்ததை குடித்ததே சிறுவனின் மரணத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
பீகாரை சேர்ந்த தம்பதியர் தங்கள் 2 மகள்கள் மற்றும் மகனுடன் வேலை தேடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளனர். சைதாப்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மூத்த மகள் மற்றும் மனைவியுடன் அந்த நபர் அப்பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர்களது 11 வயது மகனுக்கு கடந்த 10 நாட்களாக தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வைத்து சிறுவனை அழைத்து சென்றபோது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளா. அவர்களின் 7 வயது மகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதை குடித்ததால் தான் சிறுவன் உயிரிழந்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர் குழாயில் வரும் நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பலியான சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளில் காலாவதி ஆன உணவைச் சாப்பிட்டார்களா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வட மாநில சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை மாநகரம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications