14 இடங்களில் சதமடித்த வெயில்.. இந்தாண்டின் அதிகபட்ச வெப்பம் ஈரோட்டில்.. எஸ்கேப் ஆக என்ன செய்யணும்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மட்டும் மொத்தம் 14 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில், இந்தாண்டு அதிகபட்ச வெப்பம் இன்று ஈரோட்டில் பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் நிலையில், அதில் இருந்து நம்மை எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் எப்போதுமே வெப்பம் அதிகமாகவே இருக்கும். நமது நாட்டில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்பம்: இந்தாண்டு இந்தியாவில் கடந்த பிப். மாதமே உச்சம் தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவானது. ஏற்கனவே இதனால் கோடைக் காலத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரைக் கடந்த ஜன. மாதமே இங்கே பருவமழை முடிவுக்கு வந்துவிட்டது.
அதன் பின்னர் மாநிலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு, வேலூர் பரமத்தி பகுதிகளில் தொடர்ந்து வெப்பம் சதமடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையிலும் கூட இந்தாண்டில் முதல்முறையாக வெப்பம் 100ஐ தாண்டியிருந்தது. வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் மாநிலத்தில் 14 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.
ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம்: அதிகபட்சமாக இன்று ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும். அதைத் தொடர்ந்து கரூர் பரமத்தி மற்றும் சேலத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை நகர், திருச்சி, திருப்பத்தூர் வேலூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல திருத்தணி மற்றும் நாமக்கல்லில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம் மற்றும் தர்மபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. அதேபோல கோவை 102 டிகிரி பாரன்ஹீட், தஞ்சை 100 டிகிரி பாரன்ஹீட் ஆகிய இடங்களிலும் வெப்பம் சதமடித்துள்ளது. இப்படி வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
படாய் படுத்தும் வெயில்: அடுத்து வரும் நாட்களுக்கு வெப்பம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்று வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர், மோர், இளநீரைக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெயில் அதிகமாக இருக்கும் மதிய நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாகக் குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் மதிய நேரத்தில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதிகரிக்கும் வெயில் என்பது நமது கண்களை மிக எளிதாகப் பாதிக்கலாம். இதுபோன்ற நேரங்களில் கண்களைக் கூடுதல் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். கோடைக் காலங்களில் கான்ஜுன்க்டிவிடிஸ், வறண்ட கண்கள், ஸ்டை மற்றும் கண் அலர்ஜி என்று பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications