இங்கே செந்தில் பாலாஜி! அங்கே தங்கம், கேகேஎஸ்எஸ்ஆர்! அடுத்தடுத்து திமுகவிற்கு போன 2 ஷாக்.. அதிருதாமே
சென்னை: நேற்று ஒரே நாளில் திமுகவிற்கு இரண்டு அதிர்ச்சி தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு வழக்குகளில் திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் சென்றுள்ளன. இது தொடர்பாக கட்சி ரீதியாக சில ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் டாப் அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் என்று வரிசையாக குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கியமாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும் பலர் வரிசையாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வளையத்தில் மாட்டி உள்ளனர்.இந்த நிலையில்தான் நேற்று ஒரே நாளில் திமுகவிற்கு இரண்டு அதிர்ச்சி தகவல்கள் சென்றுள்ளன.
செய்தி 1: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி அல்லி விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை என்றும் வாதிடப்பட்டது. வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை எனவும், மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
பாஜகவில் ஏன் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் எப்படி சாட்சிகளை கலைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை விசாரணையின் போது, பா.ஜ.வில் ஏன் இணையக் கூடாது என அமலாக்கத் துறை கேட்டதாக கூறப்படும் வாதத்தை மறுத்த அமலாக்கத் துறை தரப்பு, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது எனவும், செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இந்த மனு மீது நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பளித்தார். அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்தி 2: இன்னொரு பக்கம் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கிலிருந்தும் விலகப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011 -ஆம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இரு வழக்குகளிலிருந்தும் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும், இரு அமைச்சர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுவதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டுமென கோரினார். தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் ஆஜராகி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய ஒரு விசயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.
இவற்றிற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை என தெரிவித்தார். இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
அதன்பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கும் தள்ளிவைத்தார்.
இப்படி நேற்று ஒரே நாளில் திமுகவிற்கு இரண்டு அதிர்ச்சி தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு வழக்குகளில் திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் சென்றுள்ளன. இது தொடர்பாக கட்சி ரீதியாக சில ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications