கிளாம்பாக்கம் உட்பட.. பஸ் கிடைக்கலைன்னு வருந்துனீங்கல்ல.. வந்தது தீர்வு.. 3000 புது பஸ்கள் வருகிறது
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், அதில் புதிதாக 3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இருப்பினும், அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இதையடுத்து உரையைச் சபாநாயகர் அப்பாவு தமிழில் மட்டும் படித்தார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலும் அளித்திருந்தார். இதற்கிடையே இன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் 2024: அவரது பட்ஜெட் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பேருந்துகள் நல்ல நிலை இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், புதிதாகப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். புதிய டீசல் பேருந்துகள் மட்டுமின்றி, மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
3000 புதிய பேருந்துகள்: இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில், "தமிழ்நாட்டில் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவையைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இது மட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு, இந்த நிதியாண்டிலேயே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
கடந்த 1997ஆம் ஆண்டில் கருணாநிதி அறிமுகப்படுத்திய சிற்றுந்து திட்டத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுக்கு அருகே உள்ள ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து சேவையை வழங்க மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து சேவை மாநிலத்தில் விரிவுபடுத்தப்படும்" என்று அவர் அறிவித்தார்.
மானியங்கள்: மேலும், மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்காக மானியமாக 3050 கோடி ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், பள்ளி மாணவர்களின் பயணத்திற்காக 1521 கோடி ரூபாயும் டீசல் மானியத்திற்கு ரூ. 1700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
சாலை திட்டங்கள்: இத்திட்டத்தில் சாலை போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பிடித்துள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1262 கிமீ 2587 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுமார் 2824 கோடி செலவில் 16 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பருவமழை காலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க 2006 கோடி ரூபாய் செலவில் 1113 உயர்மட்ட பால பணிகள் எடுக்கப்பட்டு, 683 பால பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications