இந்த 6 மாத திமுக ஆட்சி எப்படி இருக்கு தெரியுமா.. பாஜக சீனியர் தந்த பரபர பேட்டி
திமுக அரசு குறித்து எச் ராஜா விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: அரசியல், பொது வாழ்க்கை, தனிப்பட்ட நெறிமுறைகள் உட்பட எல்லாவற்றிலும் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. கடந்த 54 வருட திராவிட ஆட்சியில் தமிழகத்தில் 10,800 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஜெய்பீம் படம் குறித்து ஏற்கனவே எச்.ராஜா தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.. "அந்தோணிசாமி என்ற பெயரை மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள்.
அந்த காட்சியில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்? இந்து மதம் என்றால் கிண்டலாக போய்விட்டதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜோதிகா
அதுமட்டுமல்ல, "அந்த மகாலட்சுமி காலண்டரை நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியும்... நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். பிற மத வழிபாட்டு தலங்களை பற்றி பேசியிருக்கலாம். ஆனால் அப்படி பேசவில்லை. ஏனென்றால் அது அவர்கள் மதம்...

வன்னியர்
ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும் பட்டியல் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.. இந்நிலையில் மீண்டும் ஜெய்பீம் படம் குறித்து எச்.ராஜா விமர்சித்துள்ளார்.. தருமபுரியில் பாஜகவின் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி 3 நாட்கள் நடந்து வருகிறது.. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் சொன்னதாவது:

இந்துக்கள்
"ஜெய் பீம் படம் திட்டமிட்டு இந்துக்களுக்குள் மோதலை உருவாக்கி மத மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்ப்பட்ட படமாகும்... இந்த நோக்கம் எப்படிப்பட்டதென்று தொடர்ந்து இந்து மக்களிடையே கொண்டுசேர்க்கும் பணியில் பாஜகவினர் ஈடுபடுவோம். தமிழகத்தில் கடந்த 6 மாத கால திமுக ஆட்சியானது, மக்கள் பணியைப் பொறுத்தவரை படுதோல்விதான்.. சென்னையில் நீர் கட்டமைப்புகள் மேம்படுத்துவது, பழுது பார்ப்பது போன்ற பணிகளுக்கு 6 மாதம் போதுமானது. ஆனால், இதை செய்யாததால்தான் இந்த மழையில் சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கி கொண்டது..

நிவாரணம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25 நாட்களாகவே தொடர் மழை காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன... இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்... கடந்த ஆட்சியில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இப்போது அவங்கதான் ஆட்சியில் இருக்காங்க.. ஒரு ஹெக்டேருக்கே ரூ.20,000 அறிவித்துள்ளார்.

நெறிமுறைகள்
தமிழகத்தில் நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டிடங்களே நீர்வழிப் பாதைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன... அரசியல், பொதுவாழ்வு, தனிமனித நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்திலுமே ஒழுக்கம் தேவை... கடந்த 54 வருடங்களாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 800 நீர்நிலைகள் மாயமாகி உள்ளன... தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த ஒழுக்க நெறிமுறைகளை வகுக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் இவ்வாறு நெறிமுறைகளை வகுக்க முடியாது.











Click it and Unblock the Notifications