பட்ஜெட்டின் 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன? “மாபெரும் 7 தமிழ்க் கனவு” : தமிழக அரசு கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் 7 முக்கிய அம்சங்கள் என்ன என்பதை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர், தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு முழுவதுமாக வாசித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே சர்ச்சைகள் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

7 key targets that will be featured in Tamil nadu budget 2024 2025

நாளை பட்ஜெட் தாக்கல்: சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை (பிப்ரவரி 19) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, பிப்.20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள் தோறும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் வர உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ இயலாது.

எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படியே, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் 7 தமிழ்க் கனவு: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் நோக்கமாக உள்ள 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது 'மாபெரும் 7 தமிழ்க்கனவு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் பட்ஜெட்டில் இந்த 7 விஷயங்கள் முதன்மைப் படுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

தமிழக அரசின் அறிவிப்பு: முன்னதாக, பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால் உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி; இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம்.

மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம். தொழில்துறையில் முன்னணி மாநிலம். இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம். வேளாண்மையில் முன்னணி மாநிலம். விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம், என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி: இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டில் ஆட்டிப்படைத்த கொரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி, நமது மாநிலத்துக்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்ந்தெறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழகத்தினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை "தடைகளைத் தாண்டி" எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+