கொரோனா அதிவேகம்: தமிழகத்தில் 8,000-ஐ கடந்த தினசரி பாதிப்பு.. சிறுவர்களை குறிவைக்கும் வைரஸ்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள்
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000-ஐ கடந்துள்ளது.

இன்று 8,449 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,71,384 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 13,032 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 4,920 பேர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
இதுவரை மொத்தம் 8,96,759 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 61,593 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 95,561 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,06,40,100 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2636 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 795 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 583 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 303 பேருக்கும், மதுரையில் 167 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் அதிகமாக பாதிப்பு
கொரோனா 2-வது அலை இந்த முறை சிறுவர்களையும் அதிகமாக தாக்கி வருகிறது. அதாவது தொடர்ந்து 2-வது நாளாக 12 வயதுக்கு உட்பட்ட 250-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக உயிரிழப்பும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எந்த இணை நோயும் இல்லாத 2 பேர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மக்கள் மாஸ்க், சமுக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனவை முழுமையாக விரட்டியடிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications