கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுடன் 9 அமைச்சர்கள் காரசார வாதம்.. என்ன நடந்தது?
சென்னை: சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நேற்று பேசினார். அப்போது அவருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன், சாமிநாதன், தா.மோ.அன்பரசன், முத்துசாமி, கே.என்.நேரு, சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா என 9 அமைச்சர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடந்த விவாதங்களை பார்ப்போம்.
சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் (பாஜக உறுப்பினர்) பேசினார். அப்போது நடந்த விவாதங்களின் விவரம்..

கோவை குறிச்சி தொழிற்பேட்டை
வானதி சீனிவாசன் பேசுகையில், கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.1.52 கோடியில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அந்த பணம் சரியான முறையில் செலவழிக்கப்பட்டதா? கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் சாலை, குடிநீர், கழிவு நீர் கால்வாய் முறையாக இல்லை .
ஒப்பணக்கார வீதி வாகன நிறுத்துமிடம்
கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்கதக்கது. கோவையில் தங்க நகை தொழில் சிறப்பு பெற்றது. அதற்கு புவிசார்குறியீடு பெற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். கோவை தெற்கு தொகுதியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் வேண்டும். ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்கள்
தமிழகம் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. இதில் இருவித பிரச்சனை இருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிடம் இல்லை. நமது மாநில தொழில்வளத்தை பெருக்க அவர்கள் உதவுகிறார்கள். அவர்களது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஐடிஐ நிறுவனங்களில் முறையான தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறதா? என சந்தேகம் வருகிறது. ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வேகமாக வழங்க வேண்டும் என்றார்.
அமைச்சர் கோவி.செழியன் பதில்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கோவி.செழியன் பதில் அளித்து பேசுகையில், " நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள், 1 லட்சம் ஊதியம் வரை பணி கிடைக்க பெற்றுள்ளார்கள். ரூ.2,877 கோடி நிதியை டாடா நிறுவனம் மூலம் பெற்று தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் 8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களே ஐடிஐ-யில் சேர்வர். ஆனால் இப்போது பி.இ, எம்.இ, எம்பிஏ முடித்த மாணவர்களும் அங்கு வந்து தொழிற்பயிற்சி பெறுகின்றனர்" என்று கூறினார். என்றார்.
சபாநாயகர் பதில்
அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "நான் முதல்வன் திட்டம் பாலம் போல இருந்து மாணவர்களை உயர்த்துகிறது" என்றார். உடனே குறுக்கிட்ட வானதி சீனிவாசன், "பாலம் கட்டுவது தவறல்ல. நல்ல திடமான பாலத்தை கட்ட வேண்டும்" என்று கூறினார்.
சிவசங்கர் பதில்
அதற்கு அமைச்சர் சிவசங்கர், "நீங்கள் கட்டிய பாம்பன் பாலம் போல நாங்கள் கட்டும் பாலம் இருக்காது, திராவிட மாடல் பாலம் எப்போதும் தரமாகவும், உறுதியாகவும் இருக்கும்" என்றார்.
பாம்பன் பாலம்
அதற்கு வானதி சீனிவாசன், "உலகில் முதல் முறையாக செங்குத்து முறையிலான பாலமாக பாம்பன் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சித்தாந்தத்திற்காக நமது பொறியியல் திறனை குறைத்து மதிப்பிட வேண்டாம். வேலை பார்க்கும், படிக்கும் இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலை கூட சொல்ல முடியாத நிலையில் 90 சதவீத பெண்கள் இருக்கிறார்கள். அதனை தடுக்க சீரிய முயற்சி எடுக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு மையம் குறித்த கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்" என்றார்.
சிவி கணேசன் பதில்
அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன், "சாலை, உணவு விடுதி, வணிக நிறுவனம் முதல் வயலில் இறங்கி பயிர் நடுவது போன்ற வேலைகளில் கூட வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். வடமாநிலத்தவர் லட்சக்கணக்கில் இங்கு வர தமிழ்நாட்டு தொழிலாளர் போல நாம் அவர்களை பாவித்து பாதுகாப்பதே காரணம். வெளி மாநில பெண்களும் இங்கு வேலை செய்யும் அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்றார்.
குறைத்து பேச வேண்டாம்
அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், அவைக்குள் ஒன்று சொல்வதும், உங்கள் கட்சித்தலைவர்கள் வெளியே பேசுவதும் வெவ்வேறாக இருக்கிறது. ஏதோ தமிழகம் பின் தங்கியிருப்பதை போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்களை போலவும் பேசுகிறார்கள். எனவே, நீங்களும் தமிழ்நாட்டை குறைத்து பேச வேண்டாம். நாங்களும் உங்களை குறைத்துப் பேசவில்லை என்று கூறினார்.
வானதி சீனிவாசன் கேள்வி
அதற்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ நாங்கள் எங்கேயும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை. பெருமைப்படுகிறோம் என்றார். தொடர்ந்து கோவை விமான நிலையத்திற்கு நிலம் எடுத்தது குறித்து ஏன் சொல்லவில்லை?. அங்கு இன்னும் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்க பணி என்னவானது என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் டிஆர்பி ராஜா
அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்து பேசுகையில், "கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அனைத்து நிதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பணிகள் மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தற்போது விமான நிலைய சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. நம்மிடம் எதுவும் இப்போது நிலுவையில் இல்லை. இனி, அவர்கள் மத்திய அரசிடம் சொல்லி, விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டும்.
கொங்கு மண்டலம் வரி
வானதி சீனிவாசன் எம்எல்ஏ தொடர்ந்து பேசுகையில், "சென்னைக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலம்தான் அதிகமான வரி வருவாயை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால், நாங்கள் கொடுத்த ஒரு ரூபாயில் எத்தனை பைசாவைத் திருப்பிக் கொடுக்கிறீர்கள் என்று நாங்கள் எங்கேயும் கணக்கு கேட்பதில்லை. ஏனென்றால், ஒட்டுமொத்தமாக தமிழகம் வளர வேண்டுமென்று தான் நாங்கள் நினைக்கிறோம் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு பேசுகையில், நாம் செலுத்துகின்ற வரியை விட, முதல்வர் ஸ்டாலின் நம்முடைய (கொங்கு) பகுதிகளுக்கு அதிகமான திட்டங்களையும், நிதியையும் வழங்கியிருக்கிறார். அங்கு இருப்பது 10.75 லட்சம் குடும்ப அட்டைகள் தான். அவற்றில் ஏறத்தாழ 4 லட்சத்து 61 ஆயிரம் குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாகப் பெற்று வருகிறார்கள். எனவே, நாம் செலுத்தக்கூடிய வரியை விட மிக அதிகமான அளவில் கோவை மாவட்டத்திற்கும், மேற்கு மண்டலத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வழங்கி உள்ளார்கள். இவ்வாறு நேற்று காரசாரமான விவாதம் நடந்தது.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்












Click it and Unblock the Notifications