சர்வரே காலி.. விஜய் கட்சியில் இணைந்தது இத்தனை லட்சம் பேரா.. திமுக, அதிமுகவிற்கு ஆட்டம் காட்டும் தவெக
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தீவிர ஆர்வம் கொண்டு செயலி மூலம் பலர் இணைந்து வருகிறார்கள். இதுவரை சுமார் 90 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமானோர் இணைந்துள்ளால் சர்வரே முடங்கியுள்ளது. வாக்காளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பேர் இணைந்துள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். கட்சி தொடங்கிய உடனேயே அவரது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. உறுப்பினர் சேர்க்கையை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். விஜய் கட்சியில் சேர்வதற்கு தீவிர ஆர்வம் கொண்டு செயலி மூலம் கட்சியில் பலர் இணைய தொடங்கினர். கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டதாக நிர்வாகிகள் அப்போது கூறினார்கள். அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது. அந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழக அரசியல் மற்றும் கட்சியின் கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் விரிவாக பேசினார். அதேபோல் கொள்கைகளை விளக்கியும் விஜய் பேசினார். நடிகர் விஜய் நேரடியாக திமுகவை தாக்கி பேசினார். பாஜகவையும் விமர்சித்தார். பாஜக, திமுக இரண்டுமே எதிரி என்று கூறினார்.
பாஜக செய்வது பாசிசம் என்றும் விமர்சிக்கும் திமுக செய்வதும் பாசிசம் தான் என்றும் பாயாசம் அல்ல என்றும் நடிகர் விஜய் விமர்சித்தார். நடிகர் விஜய் அன்று பேசிய பேச்சை மொத்த தமிழ்நாடும் பார்த்தது. கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அலுவலகங்கள், கடைகள் என எல்லா இடங்களிலும் நடிகர் விஜய்யின் பேச்சு தான் அன்று பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதிலும், திமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டது.
இந்த மாநாடு குறித்து கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை விமர்சனங்கள் எழுந்தது. இது ஒருபுறம் எனில் தவெக மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஒரே நேரத்தில் செயலி மூலம் இணைய தளத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க தொடங்கினார்கள். இதனால் இணைய தள 'செயலி'யின் சர்வர் தற்போது முடங்கியது. சர்வர் கோளாறால் கட்சியில் சேர முடியாமல் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
இதுபற்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், சர்வர் முடக்கம் இன்னும் சில தினங்களில் சரியாகும். கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்கள் விவரங்களை சேகரித்து வருகிறோம். சிறப்பு செயலி சரியானதும் மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கும் என்று கூறினார். இதனிடையே சுமார் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்களால் கூறப்படுகிறது. விரைவில் 2 கோடி என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று தவெக தலைமை உறுதியாக உள்ளதாம்.
தற்போதைய நிலையில் 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 4 கோடியே 34 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள் என்றும் இதை கணக்கிட்டு பார்த்தால் விஜய்யின் கட்சியில் 4ல் ஒரு பங்கு பேர் இதுவரை இணைந்துள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் பெருமிதம் தெரிவிக்கிறார்கள். எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே எத்தனை பேர் விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார்கள் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications