தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சௌமியா அன்புமணி.. வைத்த முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து, தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று சௌமியா அன்புமணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகள் உள்ளன. காவிரியில் ஒகேனக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரில் 3 டி.எம்.சியை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் இந்த நீர்நிலைகளில் நிரப்ப முடியும் என்று கூறினார்.

தமிழக நிதி அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு தர்மபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், "தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகத் திகழும் தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியைப் போக்கி, பாசன ஆதாரங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் வகை செய்யும் மிக முக்கியமானத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

PMK MLA Soumya Anbumani met Chief Minister Vijay at the Secretariat

தருமபுரி மாவட்டத்தின் இன்றைய மக்கள் தொகை உத்தேசமாக 16 லட்சம் என்றால், அதில் நான்கில் ஒரு பங்கினர் உள்ளூரில் வாழ்வாதாரம் இல்லாததால் பெங்களூர் போன்ற வெளி மாநில நகரங்களுக்கும், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் வாழ்வாதாரம் தேடிச் செல்கின்றனர். தருமபுரி மாவட்டத்தின் வாழ்வாதார நிலை எந்த நிலையில் உள்ளது என்பதை இதிலிருந்தே அறியலாம். இந்த நிலைக்கு காரணம் பொருளாதார உற்பத்தியின் மூன்று பிரிவுகளாகிய வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய 3 துறைகளுமே தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது தான்.

தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 49,777 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனாலும், அதில் ஒரு லட்சத்து 95,740 ஹெக்டேர் நிலங்கள் மட்டும்தான் பாசன வசதி பெற்றவை ஆகும். அதாவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வேளாண் நிலப்பரப்பில் 43.52 விழுக்காடு நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை ஆகும். மீதமுள்ள 56.48% நிலங்களில் மழையை நம்பித் தான் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் மழை அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதன் காரணமாக வறட்சியின் கொடுமையும், வாழ்வாதாரமின்மையும் நீடிக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, ஈச்சம்பாடி அணை (வள்ளமதுரை அணை), வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கின்றன. அவற்றுக்கு புத்துயிரூட்டி, போதிய பாசன ஆதாரங்களை ஏற்படுத்தித் தராவிட்டால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் படிப்படியாக அழிந்து விடும். இந்த நிலையை மாற்றுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும் திட்டம் தான் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் ஆகும். காவிரி ஆற்றில் ஒகேனக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவது தான் இந்தத் திட்டம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தருமபுரி மக்களவை உறுப்பினராக இருந்த போது இத்திட்டத்தை உருவாக்கினார்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகள் உள்ளன. காவிரியில் ஒகேனக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரில் 3 டி.எம்.சியை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் இந்த நீர்நிலைகளில் நிரப்ப முடியும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், உபரி நீர் மட்டுமே தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதால் கீழ்மடை பாசன விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது ஆகும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்வது எளிதாகும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தருமபுரி மாவட்டத்திற்கு கிடைக்கும் பயன்கள் எண்ணற்றவை ஆகும். ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் பாசன ஆதாரங்களால் வேளாண்மை செழிக்கும் என்பதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், வேலை தேடி வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்படும். அதனால், தருமபுரி மாவட்டத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை சாதகமான முறையில் மாறும்.

தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் என்பதால் மாநில அரசின் நிதியிலிருந்தே செயல்படுத்த முடியும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி 19.09.2018ஆம் நாள் தருமபுரியில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, 05.03.2019-ஆம் நாள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வழங்கினார்.

திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை மனுவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழங்கினார். அதைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஒகேனக்கலில் தொடங்கி, பாப்பிரெட்டிப்பட்டி வரை தருமபுரி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தால் பயனடையும் பகுதிகளில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் நாள் தருமபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்திற்கு அம்மாவட்ட வணிகர்கள் முழு ஆதரவு அளித்தனர். இத்திட்டத்திற்கு எந்த அளவுக்கு தருமபுரி மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வுகள் தான் சான்றுகள் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டம் குறித்து கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம், கண்டிப்பாக செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்த ஆட்சியாளர்கள் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. சமூகநீதி, உழவர்கள் நலன் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் உழவர்கள் நலனில் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்த முடியும். எனவே, விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை இடம் பெறச் செய்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+