டிராபிக் போலீஸ் அபராதம் விதித்ததாக வந்த மெசேஜ்.. ஓபன் செய்த சென்னை இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தது போன்று இ செல்லானுடன் கூடிய மெசேஜ் ஒன்று வந்துள்ளது. ஆனால் அதில் எவ்வளவு ரூபாய் என்று இல்லை. இதனால் அந்த லிங்கை கிளிக் செய்த இளைஞருக்கு அடுத்த நொடியே செல்போன் ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணமும் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரில் வசிப்பவர் செந்தில். 28 வயதான செந்திலின் செல்போன் எண்ணுக்கு அண்மையில் ஒரு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக போலீசார் அபராதம் விதித்து போல அவருடைய வண்டி எண் உடன் கூடிய செலான் வடிவில் மெசேஜ் இருந்தது.

வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்
இதனை பார்த்த செந்தில், ஒருவேளை தனது மனைவி வண்டியை ஓட்டி சென்ற போது எங்கேயாவது சாலை விதியை மீறியதற்காக போலீசார் அபராதம் விதித்து இருக்கலாம் என்று நினைத்து மெசேஜை ஓபன் செய்தார். அதில் ஒரு லிங்கும் இருந்ததால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்க அவர் லிங்கை கிளிக் செய்தார். ஆனால் அடுத்த நொடியே அவருடைய மொபைல் செயல்படாமல் முடங்கியது.
இதனால், செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்துள்ளார். ஆனால் அடுத்துதான் அவருக்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்துள்ளது. அதாவது, தனது செல்போனுக்கு ஓடிபி ஒன்று வந்துள்ளது. சில நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்த 12,600 ரூபாய் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில், எதோ தவறாக நடக்கிறது என்பதை உடனடியாக உணர்ந்தார்.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம், பெரும்பாக்கம் காவல் நிலையத்திலும் நடந்த சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆன்லைனில் சமீப நாட்களாக நூதன முறையில் பணம் திருடப்படுகிறது.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, ஆன்லைன் விளையாட்டுக்களில் ஆஃபர்கள் என பல்வேறு வகையான மெசேஜ்களை அனுப்பி அதில் உள்ள லிங்கை தொட்டால் மொத்த செல்போனையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து ஓடிபி, வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு உடனடியாக பணத்தை திருடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது போலீசார் அனுப்புவது போலவே, மெசேஜ் அனுப்பி பண மோசடி செய்து இருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் அறிவுறுத்தல்
நவீன தொழில் நுட்பங்கள் பெருக பெருக மோசடிகளும் புது விதமாக அதிகரித்து வருகிறது. ஏடிஎம் கார்டு காலாவதி ஆக போவதாக வங்கி ஊழியர்போல பேசி மோசடி செய்த காலமெல்லாம் போய், தற்போது புதுப்புது டெக்னிக்குகளில் மோசடி நடைபெற்று வருகிறது. மக்கள் கொஞ்சம் அசந்தால் கூட அவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை காலி செய்யும் அளவுக்கு நூதன முறையில் சைபர் மோசடிகள் நடைபெற்ற வருகின்றன.
எனவே பொதுமக்கள் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஒரு மெசேஜ் வந்தாலும் அதை ஓபன் செய்யாமல் இருப்பது நல்லது என்றும், மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தால் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் தப்ப முடியும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications