தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை.. ஆசிரியர்கள் தேர்வு முறை.. நீதிபதி குழு பரிந்துரைகள்
சென்னை: மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. ஆசிரியர்கள் தேர்வு முறை, ஆசிரியர் -மாணவர் விகிதாசாரம், ஆசிரியர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்டவை குறித்த முக்கிய பரிந்துரைகளை பார்ப்போம்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில், மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.

2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அக்குழு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் இராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், திருமதி.ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, இரா.பாலு, முனைவர் ஃப்ரீடாஞானராணி, பேராசிரியர் பழனி, குழுவின் உறுப்பினர் செயலர் முனைவர் ஏ. கருப்பசாமி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கைளுடன் கூடிய இந்த பரிந்துரை அறிக்கை ஆங்கிலத்தில் 550 பக்கங்களும், தமிழில் 600 பக்கங்களும் இருக்கின்றன. ஆசிரியர்கள் தேர்வு முறை, ஆசிரியர் -மாணவர் விகிதாசாரம், ஆசிரியர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்டவை குறித்து நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு பரிந்துரை அளித்துள்ளது. அளித்த பரிந்துரைகள் சிலவற்றை பார்ப்போம்.
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் மழலையர் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை தேவை.
தொடக்க நிலை முதல் பல்கலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க வேண்டும்.
இருமொழிக்கொள்கையை தொடார்ந்து பின்பற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் தேர்வு முறையை மேம்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் சேர பன்னிரெண்டாம் வகுப்புடன் பிளஸ் 1 மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.
அண்ணா, எம்ஜிஆர், தமிழ் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை தேவை.
உயர் கல்வி பயிலும் போதே பாதியில் வெளியேறி, மீண்டும் அதே படிப்பில் தொடர அனுமதிக்கக் கூடாது.
மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேரவு இருக்கக்கூடாது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கவும், பெற்றோரைக் கையாளவும், அவர்களுடன் தொடர்பு கொண்டு, பாலினப் பாகுபாடு இல்லாமல் கல்வியை தொடர்வதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.
பாலினப் பாகுபாடு உள்ள குழந்தைகளைத் துன்புறுத்துதல் அல்லது கேலி செய்தல் போன்றவை நடத்தினால் அதன் மீது அதிக முன்னுரிமை அளித்து கடுமையாகக் கையாளப்பட வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலின பன்முகத்தன்மை கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை அரவணைத்து தொடர்ந்து கல்வி கற்பது வாழ்க்கையின் நம்பிக்கையாக இருக்கும்.
கல்லூரிகளில் ராகிங் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கு பள்ளி, கல்லூரியில் படிப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உயர் வயது வரம்பு நீக்கப்பட வேண்டும்.
திருநங்கைகளுக்கு ஏற்ற ஓய்வறைகள் மற்றும் பொதுவான அறைகளை உருவாக்க வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறைகளில் தண்ணீர், நாப்கின் பயன்பாடு, நாப்கின் எரியூட்டுதல் அல்லது அப்புறப்படுத்துவது ஆகிய வசதிகளும் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் தற்பொழுது உள்ள நிலையை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம் உள்ளிட்ட பிற துறைகளை இணைத்து பள்ளிகளில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் துப்பரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, கழிப்பறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் பாரமரிப்பு பணிகளை மாதந்தோறும் ஆய்வு செய்து மத்திய அளவில் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications