சவுதி ஏர்லைன்ஸில் சென்னைக்கு பயணித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த டாக்டர்.. நடுவானில் அட்டூழியம்
சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பெண் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதிலும் சமீப காலங்களாக மைனர் சிறுவர்கள், நன்கு படித்தவர்களும் கூட பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கைது செய்யப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

சவுதி விமானம்
இதனிடையே அப்படியொரு சம்பவம் தான் சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சவுதி வழியாகச் சென்னை வந்த இளம்பெண்ணுக்கு சக பயணி ஒருவர் விமானத்திலேயே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனடியாக அந்த நபர் குறித்து விமான குழுவிடம் புகார் அளித்த அப்பெண், சென்னையில் விமானம் தரையிறங்கிய உடன் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். நடுவானில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

பாலியல் தொல்லை
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "நேற்று நான் சவுதி ஏர்லைன்ஸில் அமெரிக்காவில் இருந்து ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். தனியாகப் பயணம் செய்த எனக்கு ஜன்னல் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. விமானம் தரையிறங்க ஒரு மணி நேரம் மட்டுமே இருந்த சமயத்தில் என் இடது மார்பகத்தின் பக்கத்தில் ஏதோ உராய்வதைப் போல உணர்ந்தேன். நான் முதலில் அது என்னுடைய டிரஸ் என்றே நினைத்து, அதை அட்ஜெஸ்ட் செய்து கொண்டேன்.

பின்னால் இருந்து வந்த கை
இருப்பினும், சில நிமிடங்களில் மீண்டும் அதேபோன்ற எது ஒன்று உராயும் உணர்வை உணர்ந்தேன். அசையாமல் அப்படியே பார்த்த போது தான், சீட்டின் பின்னால் இருந்து ஒரு கை பின்வாங்குவதைக் கண்டேன். நான் கண்டது உண்மை தான் என்பதை உறுதி செய்ய அப்படியே கண்டுகொள்ளாததைப் போல இருந்தேன். அந்த சமயத்தில் அங்கு மீண்டும் அதே கை என்னைத் தொட வருவதைக் கண்டேன். இந்த முறை நான் சற்று நகர்ந்து அமர்ந்து இருந்ததால் அந்த கையை தெளிவாக பார்த்தேன். இதைப் பார்த்ததும் கோபத்தாலும் பயத்தாலும் நடுங்கினேன்! இருப்பினும், இந்தச் சூழலில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

மன்னிப்பு கோரினான்
நான் உடனே எழுந்து என் பின்னால் அமர்ந்திருந்த நபரிடம் ஆவேசமாகக் கத்தினேன். "அறிவு இல்லே? படிச்சவன் தானே நீ? கைய வெச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?" என்று நான் கேட்ட உடனேயே, "சாரி மேடம் சாரி மேடம், தெரியாமல் பண்ணிட்டேன். ப்ளீஸ் இதைப் பெரிய விஷயம் ஆக்காதீங்க" என்று மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். இதையடுத்து உடனடியாக விமான குழுவிடம் இதைக் கூறி சென்றேன். அங்கிருந்த விமான பெண்கள் என்னிடம் முற்றிலும் இனிமையாக நடந்து கொண்டார்கள். முதலில் எனக்குத் தண்ணீர் கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்தினர். நான் சற்று அமைதியான உடன், குழுவில் இருந்த ஒரு ஆண் ஊழியர் அந்த நபரிடம் இது குறித்துக் கேட்கச் சென்றார்.

விமான குழு
இந்தச் சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக நான் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். குழுவில் இருந்த மூத்த ஊழியர் ஒருவர் எனக்கு இதற்கான செயல்முறைகளை விளக்கினார். அது என்னைச் செய்வதிலிருந்து தடுப்பது போல இருந்தது. இருப்பினும் புகார் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதற்கிடையில், நான் மீண்டும் என் இருக்கைக்குச் சென்றபோது, தொல்லை கொடுத்தவர் தனது இருக்கையை மாற்றியிருந்தார். எனக்குப் பின்னால் இருந்த சீட்டில் யாரும் இல்லை.

புகார்
எனவே அந்த நபரை அடையாளம் காட்டும்படி விமான குழுவினர் என்னிடம் கேட்டனர். இருக்கையை மாற்றி இருந்த அந்த நபரை நான் அடையாளம் காட்டினேன். இதையடுத்து சவுதி ஏர்லைஸில் நான் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தேன் அதன் பின்னர் விமான குழு அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டது. மேலும், விமானி இது குறித்து ஏர்போட்டில் இருக்கும் ஊழியர்களும் தெரிவித்தார். நாங்கள் தரையிறங்கியதும் சிஆர்பிஎஃப் வீரர்களும் விமான நிலைய அதிகாரிகளும் தாயாராக இருந்தனர். விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களும் என்னை ஆசுவாசப்படுத்த உதவினர்.

படித்த நபர்
அங்கிருந்த அனைவரும் நான் போலீசிலும் இது குறித்து புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதையடுத்து என்னையும் அந்த நபரையும் அவர்கள் எஸ்2 போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த நபர் மீது நான் புகார் கொடுத்தேன். இந்த இடைப்பட்ட நேரம் முழுவதும் அந்த நபர் என்னிடம் கெஞ்சிக் கொண்டே இருந்தார். இப்படி நடந்து கொள்வது இது தான் முதல் முறை.. நான் மருத்துவராக உள்ளேன். புகார் கொடுத்தான் எனது வாழ்க்கையே நாசமாகிவிடும். எனக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது என்றெல்லாம் கூறி வந்தார். படித்த ஒரு நபர் எப்படி இப்படிப்பட்ட கொடூரமான செயல்களைச் செய்யத் துணிந்தார் என்று வெறுப்பு ஏற்பட்டது.

மருத்துவர்
அந்த நபர் தஞ்சையைச் சேர்ந்தவன்.. சமூக நல மருத்துவத்தில் எம்.டி., படித்துள்ள அந்த நபர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். அவருடைய அப்பாவும் டாக்டர், அண்ணனும் டாக்டர். அவரிடம் வரும் அனைத்து பெண் நோயாளிகளின் நிலையை நினைத்துத் தான் நான் வருந்துகிறேன். இந்த நேரத்தில், நான் சவுதி ஏர்லைன்ஸின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மிகச் சரியாகச் செயல்பட்டு எனக்கு உதவினார்கள். மேலும், எஸ்2 காவல் நிலைய ஆய்வாளரும் புகார் கொடுத்த உடன் விசாரணையைத் தொடங்கினார். சென்னை விமான நிலைய அதிகாரிகள் நாங்கள் தரையிறங்கிய நேரத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது வரை உதவினர்" என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த என்ன
இந்த ட்வீட் வைரலான நிலையில், பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே அப்பெண் மேலும் சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அப்பெண் 10 நாட்கள் மட்டுமே சென்னையில் இருக்க முடியும் என்பதால் நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால் வேறு வழியின்றி புகாரை வாபஸ் பெற்றதாக தெரிவித்தார். பெண்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான பாலியல் தொல்லை விஷயங்களை வெளிப்படையாகப் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications