விஜய் முதல்வர் ஆவதை தடுக்க நடந்த சதி! திமுக - அதிமுக கூட்டணி பேசியதா? போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: பதவி வெறி காரணமாக உதயநிதி ஸ்டாலின் விஜய் முதல்வராகுவதை தடுக்கும் முயற்சியில் இறங்கினார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். குதிரை பேரம் பேசியது நீங்களா? இல்லை நாங்களா? என உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, விஜய் மற்றும் தவெகவை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு விஜய் அன்று மாலையில் பதிலடி கொடுத்த நிலையில், இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். வில்லிவாக்கத்தில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

65 சதவீதம் பேர் உங்களுக்கு ஓட்டே போடவில்லை என சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 2006 தேர்தலில் கலைஞர், 26 சதவீத ஓட்டுகள் வாங்கிவிட்டு முதல்வர் ஆனாரே.. அதையும் உங்களால் சொல்ல முடியுமா? வெறும் 26 சதவீதம் தான் வாங்கினார்? 74 சதவீதம் பேர் அவருக்கு ஓட்டு போடவில்லை என்றும், அவர் முதல்வர் ஆனது தவறு.. என்றும் பேச முடியுமா?
இந்த அரசியல் ஏன் புதுசு என்றால் 50 ஆண்டுகள் கழித்து ஒரு புரட்சி செய்துள்ளார், நீங்க ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அதற்கு அப்புறம் உங்கள் கூட்டணி மொத்தமாக 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டீர்கள்.. எங்களுடைய வேட்பாளர் 10 லட்சம் ரூபாய் கூட செலவு பண்ணல.. ஒரு சாதாரண இளைஞன், காசே இல்லாமல் சிட்டிங் எம்.எல்.ஏவை ஒரு ஓட்டில் வீழ்த்தினார்.
நாங்க ரோட்டில் இருந்து வந்து இருக்கிறோம். உங்க அப்பா பெயரில் இருந்து வரவில்லை. கலைஞர், ஸ்டாலின் என எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு தனியாக நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்று காட்டுங்கள் அப்போது எங்க தலைவரை பார்த்து கேள்வி எழுப்புங்கள்.. ஆனால் எங்க தலைவர் சாதாரண இளைஞர்களை வெற்றி பெற செய்துள்ளார். ஒரு புரட்சி செய்துள்ளார்.
குதிரை பேர அரசு நடத்தியது யார் தெரியுமா?, நாங்க 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டோம். திமுக தோற்றுவிட்டது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்களோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம். ஆனால் ஆளுநர் அர்லேகர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்பட்டார். நீதிமன்றத்திற்கு போனால் ஒரு மாதம் ஆகிடும்.
எனவே தான் எங்களுக்கு டெல்லியில் இருந்து ராகுல் காந்தி ஆதரவு கரம் நீட்டினார். அவர் சொன்னதை அடுத்து காங்கிரஸ் எங்களோடு கூட்டணி வைத்தது. ஆளுநர் தடை போட்டபோது ராகுல் காந்தி தான் தவெக ஆட்சிக்கு கை கொடுத்தார்.
விஜய் முதல்வர் ஆகக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக, உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியிடம் பேசுகிறார். உதயநிதியும், எடப்பாடி பழனிசாமியின் மகனும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரசியல் ஞானி போல, கலைஞர் கருணாநிதி கஷ்டப்பட்டு உருவாக்கிய திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பார்களாம், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவாராம். எடப்பாடி பழனிசாமி 8ஆம் தேதி பதவியேற்க போறதாக தகவல்கள் வெளியே வந்துவிட்டது.
கம்யூனிஸ்டு தலைவர் பேபி கூறுகையில், நாங்க சப்போர்ட் பண்ணவில்லை இல்லை என்றால் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார். இதனை நான் கூறவில்லை. பேபி கூறினார். என்ன ஒரு துரோக அரசியல் செய்தாங்கன்னு இப்போ தெரியுதா?.. ஒரு தொழில் அதிபர் உதவியுடன் அதிமுக - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. சபரிசனும், உதயநிதியும் சேர்ந்து திமுக ஆட்சியை முடித்தது போல, கட்சியை முடிக்கும் பணியிலும் ஈடுபட்டார்கள். விஜய் முதல்வர் ஆகக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி இந்த வேலையை செய்தார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications