"ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில்"! தவெக பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா!
சென்னை: ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து மாலையில் விளக்கம் அளிப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். தனியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கொளத்தூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
திமுக அரசை கண்டித்து தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் விரட்டியது திமுக தான். திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வராமல் போன ரஜினி திமுக குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் நடிக்கும் நிலைமைக்கு போய்விட்டார்.

விஜய்க்கு அந்த மன தைரியம் அதிகமாக இருப்பதால் தான் அவர் அரசியலில் இறங்கியிருப்பதாக" ஆதவ் ஒப்பிட்டு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1996 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.
அவரை வைத்துக் கொண்டே ரஜினிகாந்த், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் இருப்பதாகவும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கொதித்து போய் பேசியிருந்தார்.
ஒரு அமைச்சர் முன்னிலையில் ரஜினி பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள் , ஆர்.எம்.வீரப்பனை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். இப்படி அப்போதைய முதல்வரையே தைரியமாக விமர்சித்த ரஜினியை, திமுகவுக்கு பயந்துவிட்டார், மனவலிமை இல்லாதவர் என்றெல்லாம் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சுமார் 5 நாட்கள் கழித்து ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் என்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், தனஞ்செயன், திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து மாலையில் விளக்கம் அளிப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். இதனால் தனியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆதவ் அர்ஜுனா கொளத்தூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.


Click it and Unblock the Notifications
