இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல்ரவுண்டர்.. கோலியை வைத்து ஜெய் ஷாவை கிண்டல் செய்த பிரகாஷ்ராஜ்!
சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச்சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டரை வாழ்த்துவோம் என கிண்டலாக தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ், தொடர்ச்சியாக பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகளுக்கு நிகராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். துணிச்சலாக தனது அரசியல் கருத்துக்களை பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி வரும் காரணத்திற்காக பிரகாஷ் ராஜ் பாஜக ஆதரவாளர்களால் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவரது பதிவை குறிப்பிட்டு, கிண்டலாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ்ராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டல் வழங்கி வாழ்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். ஜெய்ஷாவை கிண்டல் செய்யும் வகையில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
35 வயதான ஜெய் ஷா, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்து வருகிறார். ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிகாலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று முன்தினம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் வேட்பு மனு வழங்கவில்லை. இதையடுத்து அவர், போட்டியின்றி ஐசிசியின் தலைவராக தேர்வானார். வரும் டிசம்பர் 1 ஆம் தேதி ஜெய் ஷா, ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்கும் ஐந்தாவது இந்தியர் ஜெய் ஷா. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செல்வாக்கால் ஜெய் ஷா உயர் பதவிகளை அடைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications