திருமாவளவன் மீது பாய்ந்த சரத்குமார்.. தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்வதாக பரபரப்பு புகார்
சென்னை: தமிழகத்தில் அமல்படுத்துவதை விட்டுவிட்டு மது விலக்கு கோரி மத்திய அரசை குற்றம் சுமத்துவது சரியா என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மது விலக்கு அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசே வரி இழப்பு தரவேண்டும் என்று மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் வகையில் கூட்டணி கட்சியின் ஆட்சிக்காக மாநாட்டில் பேசியிருப்பது முற்றிலும் மக்கள் நலனுக்கு எதிரானது என்று திருமாவளவனை சரத்குமார் விமர்சித்துள்ளார்..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், காந்தி ஜெயந்தி அன்று (அக்டோபர் 2) தொல்.திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்தது. இந்த மாநாட்டில் மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் * மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும் என்றும் மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று விசிக சார்பில் தீர்மானம நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் திருமாவளவன் பேசும் போது, இந்தியா முழுவதும் 7- 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகளை மூடப்படுகிறது. திமுகவிற்கு கொள்கை அடிப்படையில் மதுவை ஒழிக்க உடன்பாடு இருக்கிறது.. ஆனால் அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. அண்ணா மதுவிலக்கை தளர்த்தவில்லை. மதுக்கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில் மதுவிலக்கு தொடர்பான விசிகவின் தீர்மானங்களை விமர்சித்து பாஜக முக்கிய பிரமுகரும் நடிகருமான சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்களில், மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள மது விலக்கை, தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம், முரண்பாட்டுடன் வேடிக்கையாக உள்ளது.
குடியுரிமை சட்டம், தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாக விவாதம் செய்பவர்கள், மாநில உரிமைகளுக்குள் இருக்கும் மது விலக்கை நேரடியாக அமல்படுத்தாமல், மத்திய அரசு தேசிய கொள்கையாக்கி அமல்படுத்திட வேண்டும் என பொறுமையாக காத்திருப்பது நகைப்புக்குரியது.
மது விலக்கு அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசே வரி இழப்பு தரவேண்டும் என்று மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் வகையில் கூட்டணி கட்சியின் ஆட்சிக்காக மாநாட்டில் பேசியிருப்பது முற்றிலும் மக்கள் நலனுக்கு எதிரானது. மத்திய அரசு மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுமத்தி, தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்பவர்களை மக்கள் அடையாளம் காணவேண்டும்" இவ்வாறு அதில் சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications