கொத்தாக அள்ளிய சமகவுக்கு "சர்ப்ரைஸ்" தருதா பாஜக? வாய் விட்டே தலைவரிடம் கேட்ட நாட்டாமை சரத்குமார்
சென்னை: தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால், தமிழக பாஜக தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, சரத்குமார், சசிகலா புஷ்பா, கனக சபாபதி, அஸ்வத்தாமன், வினோஜ் பி செல்வம், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிதாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை பெற்றுள்ள சரத்குமார், புதிதாக பாஜக தலைவர் பதவியை ஏற்றிருக்கும் நயினார் நாகேந்திரனிடம் ஒரு புதிய கோரிக்கையை விடுத்துள்ளாராம்.. அது என்ன?
கடந்த 2007ல், சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் ஆரம்பித்தார்.. ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வரும் சரத்குமாருக்கு, நாடார் வாக்குகள் கணிசமாக கிடைத்து வருகிறது. பிறகு, கடந்த வருடம் தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார்.

அதிருப்தியில் நாடார் இனமக்கள்
அந்த நேரத்தில்தான், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி, எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி போன்றவற்றில் அதிருப்தியை கண்டிருந்தது நாடார் சமூகம்.. நிர்வாக ரீதியாகவும் பதவியை தரவில்லையே? மத்திய அரசும் இதற்கு அனுமதி தராமல் உள்ளதே? என்ற வருத்தம், பாஜக மீது நாடார் சமூகத்துக்கு இருக்கவே செய்தது.
இந்த அதிருப்திகளை போக்கியும், தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும், பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்தது.. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களிலுள்ள நாடார் சமுதாய வாக்குகளை, மொத்தமாக பாஜகவுக்கு திருப்ப வேண்டும் என்றும் முடிவு செய்தது. இவைகளை மையப்படுத்தியே, சரத்குமாரை பாஜகவுக்குள் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.
ஒரே வாரத்தில் அதிரடி
பாஜகவிடன் இணைந்ததை சரத்குமாரின் கட்சி நிர்வாகிகள் பலரே விரும்பவில்லையாம். எனினும், பாஜகவில் கட்சியை இணைத்த ஒரே வாரத்தில், விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டார்.. அதற்கு முன்னதாக, நெல்லை தொகுதியை சரத்குமார் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அங்கு நயினார் நாகேந்திரன் களம் காண தயாராக இருந்ததால், விருதுநகர் ராதிகாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல, சமீபத்தில் சரத்குமாருக்கு பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னை தி.நகரில் உள்ள Geetham Banquet Hall-ல் "நாட்டாமை குடும்பத்தினருடன் சந்திப்பு" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சரத்குமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் கோரிக்கை வைத்த நாட்டாமை
நிகழ்ச்சியின் முடிவில், நயினார் நாகேந்திரனிடம் சில விஷயங்களை மனம்விட்டு பேசினாராம் சரத்குமார்.. குறிப்பாக, "கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் நான் இணைந்தபோது, ச.ம.க.வின் பல மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் என்னுடனேயே பாஜகவில் இணைந்தார்கள். ஆனால், 1 வருடமாகியும் அவர்களில் பல பேருக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், சிலர் என் மீது வருத்தமாகவும் இருப்பதால், என்னை நம்பி பாஜக வந்தவர்களுக்கு பொறுப்புகள் தந்தால் நல்லா இருக்கும்" என்று கோரிக்கை விடுத்தாராம்.
இதைக்கேட்ட நயினாரும், சமத்துவ மக்கள் கழகத்தில் இருந்து, பாஜகவில் இணைந்தவர்களுக்கு விரைவில் பொறுப்பு வழங்கப்படும் என்று உறுதி தந்தாராம்.. தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நியமிக்கப்பட்டு, அடுத்தநாளே தன்னுடைய கோரிக்கையை கொண்டு சென்றிருக்கிறார் நாட்டாமை..!!












Click it and Unblock the Notifications