ரோல்ஸ்ராய்ஸுக்கு வரி கட்ட தயார்.. தேச விரோதி என முத்திரை குத்துவதா?.. விஜய் வழக்கறிஞர் வாதம்
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி ரத்து செய்யக் கோரிய வழக்கில் நடிகர் விஜய்யை ஏதோ தேச விரோதி போல் சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது என விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியை ரத்து செய்யுமாறு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவானது தனி நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

சினிமாவில் சித்தரிப்பு
சமூக நீதிக்கு பாடுபடுவது போல் சினிமாவில் சித்தரிக்கப்படும் நடிகர்கள் வரி விலக்கு கேட்பதை ஏற்க முடியாது. நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோக்களாகவே இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என விமர்சித்து ரூ 1 லட்சம் அபராதம் விதித்தார்.

மேல்முறையீட்டு மனு
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை வருமான வரி துறை தொடர்பான அமர்வுக்கு மாற்றப்பட்டு நீதிபதிகள் ஹேமலதா- துரைசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர்
இந்த வழக்கில் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகினார். அவர் முன் வைத்த வாதம்: நடிகர் விஜய்யை ஏதோ தேசவிரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது. விஜய் தொடர்ந்த வழக்கு 9 ஆண்டுகள் கிடப்பில் இருந்ததற்கு அவரா காரணம்?

கடும் விமர்சனம்
விஜய்யை கடுமையாக விமர்சித்துவிட்டு அபராதம் விதித்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இறக்குமதி கார் மீது நுழைவு வரி விதிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்ததால் வழக்கு தொடர்ந்தார். இது போன்ற வழக்குகளில் வெறுமனே நிராகரித்த நீதிமன்றம் விஜய் வழக்கில் மட்டும் அவரை விமர்சித்துள்ளது.

அபராதம்
விஜய் மீது கூறப்பட்ட நியாயமற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும். விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ 1 லட்சம் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். வழக்கிற்கும் மனுதாரர் செய்யும் தொழிலுக்கும் என்ன தொடர்பு உள்ளது? எல்லா நடிகர்களையும் பொத்தாம்பொதுவாக மனம் போன போக்கில் தனி நீதிபதி விமர்சித்ததை ஏற்க முடியாது. வருமான வரித் துறை கணக்கிட்டு சொல்லும் வரியை 7 முதல் 10 நாட்களுக்குள் செலுத்த விஜய் தயாராக உள்ளார். எனவே அவர் மீதான தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் என வாதிட்டார்.












Click it and Unblock the Notifications